திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘உங்களில் ஒருவன் பதில்கள்’ பதிவில் கலைஞர் நூற்றாண்டு விழா குறித்து பதிலளித்துள்ளார்.
கேள்வி: "கலைஞர் நூற்றாண்டு விழா வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது. எப்படி கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?"
பதில்: "மறந்தால் அல்லவா நினைப்பதற்கு என்று சொல்வார்கள் அல்லவா. நம் நெஞ்சம் எல்லாம் நிறைந்திருக்கும் தமிழினத் தலைவர் கலைஞரை மக்கள் நாள்தோறும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். வருகின்ற ஜூன் 3 அன்று கலைஞரின் நூற்றாண்டு தொடங்க உள்ளது. இந்த விழாவை இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் கொண்டாட இருக்கிறோம். ஓராண்டுக்காலம் முழுவதும் தலைவர் கலைஞரின் சாதனைகளை நினைவுபடுத்தி நன்றி செலுத்தும் ஆண்டாக இருக்கப் போகிறது.
ஜூன் 5 ஆம் நாள் இந்த நூற்றாண்டு தொடக்க விழா நடைபெற உள்ளது. இதற்காக மாண்புமிகு குடியரசுத் தலைவரை டெல்லி சென்று சந்தித்து அழைப்பு விடுத்துள்ளோம். இந்த சந்திப்பின் போது குடியரசுத் தலைவர் கலைஞர் மீதும் தமிழ்நாட்டின் மீதும் வைத்துள்ள மதிப்பையும் மரியாதையையும் நான் அறிந்தேன். பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதல் குடியரசுத் தலைவர் அவர். இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் அவர்.
விளிம்பு நிலை மக்கள் அதிலும் குறிப்பாக பெண்கள் அரசியல் ஆளுமைகளாக வர வேண்டும் என நினைத்த தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைப்பது மிக மிகச் சிறப்பானது. சென்னை கிண்டியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திறந்து வைக்கிறார்கள். மதுரையில் அமைக்கப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு நூலகம் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது. வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாமல் அதன் பிறகும் மக்களுக்கு பயனளிக்கும் தலைவராக விளங்கி வருகிறார் என்பதை சொல்லத்தக்க வகையில் பயனுள்ள விழாக்களாக இவை அனைத்தும் அமையும்" என்று தெரிவித்துள்ளார்.