Skip to main content

பிரதமர் மோடியை கடுமையாக சாடிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
CM MK Stalin slammed Prime Minister Modi 

சென்னை தங்க சாலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வடசென்னை வளர்ச்சித் திட்ட விரிவாக்கப் பணிகளின் கீழ், வடசென்னை பகுதிக்கு விரிவான வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில் 11 துறைகளை உள்ளடக்கி 4181.03 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 219 திட்டப் பணிகளை தொடங்கி வைக்கும் விதமாக முதற்கட்டமாக 87 திட்டப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (14.3.2024) தொடங்கி வைத்தார். எஞ்சியுள்ள திட்டப் பணிகள் மூன்று ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். மேலும் வடசென்னை வளர்ச்சித் திட்டத்திற்கான இலச்சினையை வெளியிட்டார். முன்னதாக வடசென்னை வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்பான புகைப்படக் கண்காட்சியை  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார்.

இந்த விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “திமுக அரசு சென்னையை உயர்த்த நாள்தோறும் புதிய புதிய திட்டங்களை நிறைவேற்றுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை எப்படி வெள்ளத்தில் முழ்கியது. சென்னை மட்டுமா. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நிதிநிலைமையும் மூழ்கடித்துவிட்டு சென்றார்கள். அவர்களைப் போன்று தான் 10 ஆண்டு கால பா.ஜ.க. ஆட்சியும் சென்னைக்கு எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டிற்கும் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், நாளைக்கு (15.03.2024) பிரதமர் மோடி கன்னியாகுமரி வரப்போகிறார். எதற்காக வரப் போகிறார்?. தமிழ்நாட்டிற்கான சிறப்புத் திட்டங்களை உருவாக்கித் தர வரப் போகிறாறா? இல்லை. ஓட்டு கேட்டு வரப் போகிறார். ஓட்டு கேட்டு வருவதை நான் தவறு என்று சொல்ல விரும்பவில்லை.

CM MK Stalin slammed Prime Minister Modi 

சென்னை வெள்ளத்தில் மிதந்த போது, மக்களுக்கு ஆறுதல் கூற வராத பிரதமர், தூத்துக்குடியும், கன்னியாகுமரியும் வெள்ளத்தில் மிதந்த போது மக்களைப் பார்க்க வராத பிரதமர், ஒட்டு கேட்டு மட்டும் வருவது நியாயமாக இருக்கிறதா?. குஜராத் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, அன்றைய தினமே ஹெலிகாப்டரில் சென்று பார்த்தாரே. மறுநாளே, நிவாரண நிதி கொடுத்தாரே. குஜராத்திற்கு ஏன் கொடுத்தீர்கள் என்று நான் கேட்கவில்லை. தமிழ்நாட்டுக்கு ஏன் தரவில்லை என்று தான் கேட்கிறேன். குஜராத்துக்கு அன்றைய தினமே நிதி தருவதும், தமிழ்நாட்டிற்கு மூன்று மாதம் சென்ற பிறகும் நிதி தர மனதில்லாமல் போவதும் ஏன்? இதை கேட்டால், நம்மை பிரிவினைவாதி என்று அடையாளம் காட்டுகிறார்கள். நம்மை பிரிவினைவாதி போல் பேசுகிறார்கள். பிரதமர் மோடி அவர்களே பிரிவினை எண்ணம் எங்களுக்கு இல்லை. ஒரு கண்ணில் வெண்ணெய்யும், மற்றொரு கண்ணில் சுண்ணாம்பும் ஏன் என்று தான் கேட்கிறோம். நான் அழுத்தம் திருத்தமாக சொல்வது, தேசபக்தியை பற்றி எங்களுக்கு யாரும் போதிக்க வேண்டியது அவசியம் இல்லை. நாட்டுப்பற்று பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பு எடுக்க வேண்டிய அவசியமே கிடையாது” எனத் தெரிவித்தார்.

CM MK Stalin slammed Prime Minister Modi 

இந்த நிகழ்ச்சியில்அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியன், பி. கே. சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி. வி. கணேசன், சென்னை மாநகராட்சி மேயர்  ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, இரா. கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.டி. சேகர், தாயகம் கவி, இ. பரந்தாமன், ஜான் எபிநேசர்,  அ.வெற்றியழகன், ஐட்ரீம் மூர்த்தி, ஜோசப் சாமுவேல், சென்னை துணை மேயர் மு. மகேஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ. ராதாகிருஷ்ணன் எனப் பலரும் கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

“தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்” - தமிழக முதல்வர் உத்தரவு!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Tamil Nadu Chief Minister's ordered Drinking water should be distributed without interruption

தமிழகத்தில் கோடை வெயில் தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் 8 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் கொளுத்தி வருகிறது. குறிப்பாக மதுரை, ஈரோடு போன்ற பகுதிகளில் வெப்ப அலை வீசி, மக்களைப் பாதிப்படைய செய்கிறது.

வெப்ப நிலை அதிகமாக இருக்கும் இந்த நிலையில் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் அரசு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தை எதிர்கொள்ள சிறப்பு நடவடிக்ககளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, நீர்வளத்துறை அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-04-24) ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் பேசியதாவது, “கோடைகாலம் அதிக வெப்பம், அதிக குடிநீர் தேவை என்ற இரு நெருக்கடிகளை ஏற்படுத்தும். மேற்கு மாவட்டங்களில் மழை குறைவால் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை அதிகாரிகள் விளக்கினர். அணைகளின் நீரை சிக்கனமாக பயன்படுத்தி 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டியுள்ளது. அணைகளில் தற்போது இருப்பில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி சமாளிக்க வேண்டிய சூழல் உள்ளது. கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம் தேவை என்பதால் அனைத்து துறையினரும் இணைந்து செயல்பட்டு மக்கள் பாதிக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ஏற்கெனவே ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியை மாவட்டங்கள் பகிர்ந்து குடிநீர் வழங்கல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். கூட்டு குடிநீர் திட்டங்கள், நீரேற்று நிலையங்கள் செயல்பட தடையற்ற மின்சாரம் அவசியம் வழங்க வேண்டும். திட்டப்பணிகளுக்கு தடையற்ற மின்சாரம் கிடைப்பதை மின்வாரியத் தலைவர் உறுதி செய்ய வேண்டும். தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் குடிநீர் விநியோகம் போன்ற முக்கிய பணிகளில் சுணக்கமின்றி கண்காணிக்க வேண்டும். கிராமப்புறங்களில் வறண்ட ஆழ்துளை கிணறுகளுக்கு பதிலாக வேறு குடிநீர் ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும். ” எனத் தெரிவித்துள்ளார்.