இசிஐ திருச்சபையின் பேராயாரும், இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவருமான எஸ்ரா சற்குணம் (வயது 85) உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 22ஆம் தேதி காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து சென்னை கீழ்ப்பாக்கம் கார்டன் காலனியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி நடைபெற உள்ளது. இது தொடர்பாகத் தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “உடல் நலக்குறைவால் கடந்த 22ஆம் தேதி (22.9.2024) அன்று காலமான மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் பேராயர் எஸ்றா சற்குணம் (வயது 86) அவர்களது உடலுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (26.09.2024) காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
எஸ்றா சற்குணம் தமிழ்ச் சமூகத்திற்கு, குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, தனது இறுதி நாள் வரை தொடர்ந்து சேவை ஆற்றி வந்துள்ளார். இன்று (26.9.2024) சென்னை, கீழ்ப்பாக்கம் கார்டன் காலனியில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படும் அவரது உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.