தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர், “தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில் ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக முன்னேறியுள்ளது. மோட்டார் வாகனங்கள் மற்றும் மின்னணு உதிரி பாகங்கள் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக இருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு சுமார் 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது. திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
அதே சமயம் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே அதிமுக எம்எல்ஏக்கள் இன்று (27.06.2024) காலை முதல் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். சட்டமன்றக் கூட்டத்தொடரில் இருந்து அதிமுக எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதைக் கண்டித்தும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை கேட்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.