திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த வன்னிய அடிகளார் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன். அந்த ஊருக்கு அருகிலுள்ள சின்னவேப்பம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இருவரும் நெருங்கிய நண்பர்கள். வெங்கடேசன் லாரி உரிமையாளராக உள்ளார். சங்கர் லாரி மெக்கானிக்காக வேலை பார்த்துவருகிறார். இருவரும் நண்பர்கள் என்பதால் இருவருக்கும் கொடுக்கல் வாங்கல் இருந்துள்ளது. வெங்கடேசன் சங்கருக்கு கடனாக 10 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், டிசம்பர் 10ஆம் தேதி மாலை கடனை எப்போது திருப்பித் தருவாய் எனக் கேட்க சங்கர் வீட்டிற்கு வெங்கடேசன் சென்று, அவரிடம் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டதாக கூறப்படுகிறது. அங்கு இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் சங்கர் அவரது வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து வெங்கடேசனை அடித்துள்ளார். இதில் படுகாயமடைந்து, வலியில் கத்தியுள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிலர் ஓடிவந்து படுகாயமடைந்து இரத்த வெள்ளத்திலிருந்த வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கே முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் வழியிலே வெங்கடேசன் உயிரிழந்தார். மருத்துவமனையிலிருந்து தரப்பட்ட தகவலின் பேரில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர். வெங்கடேசனை தாக்கிய சங்கர், வெங்கடேசன் இறந்தார் என்ற தகவலைக் கேட்டு பயந்துபோய் தலைமறைவாகிவிட்டார். சங்கர் மனைவி பாக்கியலட்சுமியும் தலைமறைவாகியுள்ளார். இருவரையும் போலீசார் தேடிவருகின்றனர். கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டவரை கடன் வாங்கியவர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.