சேலம் அருகே, தலைமை ஆசிரியையின் அலட்சியத்தால் கோயிலில் சாமி கும்பிடச் சென்ற சிறுமி தீயில் கருகிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள தெத்திகிரிப்பட்டியை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மனைவி புனிதா. கூலித்தொழிலாளிகள். இவர்களுக்கு பூவரசன் என்ற மகனும், விஜயபாரதி (12) என்ற மகளும் உள்ளனர். மகள், தெத்திகிரிப்பட்டி அரசுப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறாள்.
கடந்த 5.10.2018ம் தேதி, காலை 8.30 மணியளவில் பள்ளிக்கு வழக்கம்போல் விஜயபாரதி சென்றிருந்தாள். பள்ளித் தலைமை ஆசிரியை குழந்தையம்மாள், ஒரு சுற்றறிக்கையை சிறுமியிடம் கொடுத்து அனுப்பி, அதை பள்ளியின் அனைத்து ஆசிரியர்களிடம் காட்டி கையெழுத்துப் பெற்று வருமாறு பணித்துள்ளார்.
சுற்றறிக்கையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு வெளியே உள்ள மற்ற வகுப்பு ஆசிரியர்களிடம் கொண்டு சென்றுவிட்டு மீண்டும் தலைமை ஆசிரியையை நோக்கி வந்து கொண்டிருந்தாள். பள்ளிக்கு அருகே ஒரு கோயில் உள்ளது. அந்தக்கோயிலில் சிறுமி விஜயபாரதி சாமி கும்பிட்டாள்.
அப்போது திடீரென்று சிறுமியின் துப்பட்டாவில் கோயிலில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் தீ பட்டதால், மளமளவென தீப்பிடித்தது. தீப்பட்டதால் துணி உடலில் ஒட்டிக்கொண்டது. இதனால் சிறுமியின் வலது புறத்தில் கழுத்து, வலதுபக்க வயிறு, தொடை வரை தீக்காயம் ஏற்பட்டது.
சம்பவத்தின்போது கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த கார் ஓட்டுநரும் மற்றும் சிலரும் சிறுமியை மீட்டு மேச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாயார் புனிதா கூறுகையில், ''பள்ளி நேரத்தில் என் மகளிடம் வேலை வாங்கியதுடன், சுற்றுச்சுவரை கடந்து சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வகுப்புக்கு வராததை கண்காணிக்கத் தவறிய தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து தலைமை ஆசிரியையிடம் கேட்டதற்கு, உங்கள் மகளுக்கு நான் வேலை கொடுக்கவில்லை. வேறு ஒரு மாணவிக்குதான் வேலை வைத்தேன். பத்து பேரை வைத்து இந்தப் பிரச்னையை பேசி முடிச்சிக்கலாம் என்று பொறுப்பற்ற முறையில் கூறினார். அவர் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
மேச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.