திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நேற்று இரவு வருகை தந்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வரவேற்றார். இன்று காலை 10 மணிக்கு நகராட்சி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்துக்கொண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் சிறப்பாக செயல்பட்ட இளைஞர்கள் 4 பேருக்கு விருதுகள் வழங்கினார். செஞ்சிலுவை சங்கத்திற்கு ஒரு கார் வழங்கப்பட்டது.
அடுத்ததாக 11 மணிக்கு அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு நகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு கையுறை, துடைப்பம், முகவுறை போன்றவற்றை வழங்கவும், ஆட்டோக்களுக்கு தூய்மை இந்தியா ஸ்டிக்கர்களை ஒட்டும் நிகழ்ச்சிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் வந்தபோது, திமுக தலைமையின் அறிவுறுத்தல்படி திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு எம்.எல்.ஏ தலைமையில் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 500க்கும் அதிகமான தொண்டர்கள் கலந்துக்கொண்டனர். ஆட்டுக்கு தாடி போல, மாநிலத்துக்கு கவர்னர் எதற்கு என கவர்னர் கார் தேரடிவீதி வழியாக செல்லும்போது திமுகவினர் கோஷமிட்டனர். இதனை காரில் அமர்ந்து பார்த்தபடி கவர்னர் பார்த்து சென்றார்.
கவர்னர் சென்னையில் இருந்து கார் மூலமாக திருவண்ணாமலை வந்தார். அவர் வருகைக்காக நகரை மூன்று நாட்களாக தூய்மை செய்து வைத்திருந்தனர் மாவட்ட நிர்வாகத்தினர். இந்நிலையில் இன்று அண்ணாமலையார் கோயில் முன்பு சுத்தம் செய்யாமல் வைத்திருந்தனர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள். அதுப்பற்றி விசாரித்தபோது, கவர்னர் வந்து தூய்மை செய்யனும்கிறதுக்காக சுத்தம் செய்யாமல் வைத்திருந்தோம், சுத்தம் செய்து வச்சியிருந்தா கவர்னரோட வர்ற அதிகாரிகள் திட்டுவாங்க அதனால சுத்தம் செய்யாதிங்கன்னு சொல்லியிருந்தாங்க, அதனால் சுத்தம் செய்யல என்றார்கள். சுத்தம் செய்யாத அந்த பகுதியை கவர்னர் வந்து சுத்தம் செய்வது போல் போஸ் தந்துவிட்டு, துப்புரவு பணியாளர்களுக்கான பாதுகாப்பு கவசங்களை தந்துவிட்டு சென்றார்.
இந்த நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கிரிவலப்பாதையில் உள்ள பயணியர் விடுதியில் கவர்னர் தங்கியிருக்கிறார். அங்கு பொதுமக்களிடம், கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டுள்ளார். மதியம் 1 மணி வரை மனுக்களை பெற்றப்பின், மதியம் 3.30 மணிக்கு அண்ணாமலையார் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு, சன்மார்க்க சங்கம் அமைப்பின் விழாவில் கலந்துக்கொண்டபின் மாலை 4.30 மணிக்கு சென்னை திரும்புகிறார்.