திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலக்குண்டு அருகே இருக்கும் வி.குரும்பபட்டி கிராமம் இக்கிராமத்தில் தனியார் சோலார் மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கடத்தி செல்வதற்கான மின்கம்பங்கள் குரும்பப்பட்டி கிராமத்தின் ஊருக்குள் அமைக்கப்பட்டது.
குடியிருப்பு வீடுகள் அருகே பள்ளிகள் அருகே மற்றும் மேல்நிலை தொட்டிக்கு அருகே என பொதுமக்களுக்கு, பள்ளி மாணவர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் மின்கம்பங்கள் ஊன்றப்பட்டுள்ளன. 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கடத்தி செல்வதற்கான மின் கம்பிகள் அமைக்கும் பணியை நடைபெற்றபோது அந்தக் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அரசு அதிகாரிகள் மற்றும் மின்சாரதுறை, காவல்துறை ஆகியவற்றுக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் இதுதொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு மின்கம்பத்தில் ஏறி நின்றுகொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த பெண்களும் மின்கம்பத்தில் ஏறியதால் பரபரப்பு நிலவியது.
உயர்மின் கம்பம் அமைக்க வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். அரசு மற்றும் அதிகாரிகள் அனைவரும் தனியார் சோலார் நிறுவனத்திற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கூறினர். பொதுமக்களின் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.