மத்திய அரசு, அண்மையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை இரவோடு இரவாக அமலுக்குக் கொண்டு வந்தது. இந்த சட்டத் திருத்தம், இந்தியாவில் தஞ்சம் அடைந்த முஸ்லிம்கள், ஈழத்தமிழர்களுக்கு எதிரானதாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, வடஇந்திய மாநிலங்கள் இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக போர்க்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து, தமிழகத்திலும் செவ்வாய்க்கிழமை (டிச. 17) திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத பிரிவினையின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டு உள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர். பாஜக அரசுக்கு துணை போகும் அதிமுக அரசு, இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும் அப்போது கண்டனம் தெரிவித்தனர்.
'மத்திய அரசே மத்திய அரசே... இந்தியர்களை பிரிக்காதே'; 'கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்... சிறுபான்மையினரை வஞ்சிக்கும் சட்டத்தைக் கண்டிக்கிறோம்'; 'ஈழத்தமிழர்களை புறக்கணிக்கும் சட்டத்தை கண்டிக்கிறோம்'; 'எடப்பாடி அரசா? எடுபிடி அரசா?' என்று திமுகவினர் முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து ராஜேந்திரன் எம்எல்ஏ கூறுகையில், ''மேற்கு வங்கம், டெல்லி, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில், அந்தந்த மாநில முதல்வர்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ள நிலையில், மத்திய பாஜக அரசுக்கு கூஜா தூக்கும் வகையில் அந்த சட்டத்திற்கு ஆதரவு அளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முஸ்லிம்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் மிகப்பெரும் துரோகத்தை செய்துவிட்டார். இந்த சட்டத்திற்கு எதிராக நாடே எரிந்து கொண்டிருக்கிறது. உடனடியாக குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்,'' என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில், 150 பெண்கள் உள்பட 800- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.