“புதுச்சேரி மாநிலத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். அதை நிறைவேற்றுவதற்கும் அனுமதிக்க மாட்டோம். அதற்காக புதுச்சேரி அரசு வருகிற 12–ஆம் தேதி சிறப்பு சட்டமன்றத்தை கூட்டியுள்ளது. அப்போது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்தும், இச்சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்படும். இதன் மூலம் மோடி தலைமையிலான மத்திய அரசு எங்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தாலும் அதனை எதிர்கொள்வோம்" என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.
அதன்படி நாளை சிறப்பு சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி முதலமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “ மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏக்கள் என்னை சந்தித்து மனு ஒன்றை கொடுத்துள்ளனர். அதில் புதுச்சேரியின் அரசை ஆளும் காங்கிரஸ் கட்சி கூட உள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் கொண்டு வரவுள்ளது என்று கூறியுள்ளனர். அவர்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக விவாதிக்கவோ, தீர்மானம் இயற்றவோ புதுச்சேரி சட்டமன்றத்துக்கு யூனியன் பிரதேச சட்டப்படி அதிகாரமில்லை என சட்டசபை சபாநாயகருக்கும் மனு அளித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து நான் தங்களளின் கவனத்துக்கு கொண்டு வருவது என்னவென்றால் குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டம் புதுச்சேரி மாநிலத்துக்கும் பொருந்தும். யூனியன் பிரரதேசங்களுக்கான சட்டப்படி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாம் கேள்வி எழுப்ப முடியாது. அதுபற்றி சட்டமன்றத்தில் விவாதிக்கவும் அதிகாரமில்லை. மேலும் இந்த சட்டம் தொடர்பாக பிரச்சனை உச்ச நீதிமன்றத்தில் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் உள்ள எந்த ஒரு பிரச்சினை தொடர்பாகவும் சட்டமன்றத்தில் விவாதிக்க அனுமதிக்க முடியாது" என கூறியுள்ளார்.
இந்த கடிதத்தையும், பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கொடுத்த மனுவையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கிரண்பேடி சட்ட ரீதியாக ஆய்வு செய்து முதலமைச்சருக்கு இந்த அறிவுறுத்தல் கடிதத்தை அனுப்பியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் இன்று கூடும் சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமா…? எனும் கேள்வி எழுந்துள்ளது.