அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வெற்றியூர் கிராமத்தில், பனை விதைகள் விதைக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, வெற்றியூர் கிராமத்தில் உள்ள சின்ன ஏரிக்கரையில் பனை விதைகளைக் கொண்டு கோலமிட்டு பனை மரம் வரைந்தும் அதில் இளைஞர்களை அமரவைத்தும் - நிற்க வைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஓவியர் மாரியப்பன் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பனை மரத்தை வரைந்தார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி கீழப்பழுவூர் காவல் ஆய்வாளர் வெங்கடேசுவரன், வெங்கனூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் நந்தகுமார், 3 இலட்சம் பனை விதைப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தங்க சண்முக சுந்தரம், ஸ்வீட் பாய்ஸ் ஒருங்கிணைப்பாளர் இளவரசன், வெற்றியூர் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கிராம ஊராட்சி முன்னேற்றக் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
பின்னர் நடந்த 2,000 பனை விதைகள் நடவு நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர். பனையின் அவசியம் குறித்து அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன், அரியலூர் மாவட்ட நீர்நிலைகளில் உள்ள கரைகளில் மண் அரிப்பைத் தடுக்கும் வகையில் 3 இலட்சம் பனை விதைகளை விதைக்கின்ற நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கூறிய வழியில் பனையின் பயன்களைப் பற்றி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
'கஜா' புயலின்போதுகூட எந்தவித பாதிப்பும் ஏற்படாத நம் தமிழக மாநில மரமான பனையை மீட்டெடுக்கும் வகையில், '3 இலட்சம் பனை விதைப்பு' இயக்கம் துவங்கப்பட்டது. இந்த இயக்கத்தின் சார்பில் முதன்முதலாக 1,100 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரி முதல், குமாரமங்கலம் கிராமத்தில் உள்ள குரங்கு ஏரி, அய்யாவூட்டு ஏரி, கடுகூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரிக்கரையிலும் சிறப்பான முறையில் பனைவிதைகள் நடப்பட்டுள்ளது.
பனை விதைகள் விதைப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கீழப்பழுவூர் காவல்துறை ஆய்வாளர் வெங்கடேசுவரன் கூறுகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் கூறியது போல காவல்துறை அனைத்து வகையிலும், பனை விதைகளை நடவு செய்யும் இயக்கத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
மேலும் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவி தவமணி சுப்ரமணியன் ஒன்றிய கவுன்சிலர் கண்ணே செல்வம், மாவட்ட கவுன்சிலர் கீதா ஜெயவேல் மற்றும் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் 'அன்புடன் அக்னி சிறகுகள்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் வினோதகன், சுபாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வெற்றியூர் நண்பர்கள் குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி முன்னேற்றக் குழு உறுப்பினர்கள், இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.