தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு சோழர்காலத்தில் தானமாக வழங்கப்பட்ட தங்க விளக்கை கண்டுபிடிக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பந்தநல்லூரைச் சேர்ந்த ஆர்.வெங்கட்ராமன் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் கூறியிருப்பதாவது: "பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் 1931 ம் ஆண்டு தொல்லியல் துறையினர் அந்த கோயிலில் உள்ள கல்வெட்டுகளை படி எடுத்தனர். அதில் கோயிலுக்கு தானமாக வழங்கப்பட்ட அணிகலன்கள் குறித்து தகவல்கள் உள்ளது.
இதில், பசுபதீஸ்வருக்கு "பொன்னால்" ஆன தங்கவிளக்கு ஒன்று சுமார் 3 கிலோ எடையில் சோழர்காலத்தில் செம்பியன் மாதேவியார் வழங்கியதாக கூறப்படுகிறது. மேலும், அங்குள்ள ஆதிகேசவ பெருமாளுக்கு தங்க பூனூல் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அந்த பூனூல் தற்போது பசுபதீஸ்வரர் கோயிலில் பாதுகாப்பகத்தில் உள்ளது.
பெருமாள் மற்றும் சிவனுக்கு பல்வேறு அணிகலன்கள் தங்கத்தால் வழங்கப்பட்டுள்ளதாக கல்வெட்டு செய்தி மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொன்மையானதும், கலைநயம் மிக்க பொன் மற்றும் வைர நகைகள், அணிகலங்கள், பூஜை பொருட்கள் ஆகியவைகள் கோயிலின் ஆரம்ப சொத்து பதிவேட்டில் அனைத்தும் உள்ளது.
1951 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைய துறைக்கு கட்டுப்பாட்டில் வந்தபோது அவற்றை கணக்கு பார்த்து தான் அரசு எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்து சமய அறநிலைய துறையினர் 1999 ஆண்டுக்கு பிறகு நகைகள் மற்றும் விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்யவில்லை.
பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு வழங்கப்பட்ட தங்க விளக்கு தற்போது எங்குள்ளது, அவை திருட்டு போனதா, அல்லது வேறு எங்கும் பாதுகாப்பு கருதி வைக்கப்பட்டுள்ளதாக என்பதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் " என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.