10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 6 ஆம் தேதி 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடந்தது. இத்தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக அமைக்கப்பட்ட 4,207 தேர்வு மையங்களில் சுமார் 9,96,089 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். ஏப்ரல் 6 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 20 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றது. முன்னதாக 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் தேதி தொடங்கியது. 2022 - 2023 கல்வியாண்டிற்கான 11 ஆம் வகுப்புத் தேர்வினை 7.8 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இந்நிலையில் வரும் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன. அதேபோல் 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளும் அதே நாள் பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnresults.nic.in மற்றும் www.dge.tn.gov.in என்ற இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வு முடிவுகளை வெள்ளிக்கிழமை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தில் வைத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார். மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்துள்ள தொலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்திகள் மூலமாக மதிப்பெண்கள் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.