சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று சமீபத்தில் விடுதலையானார் சசிகலா. அதன்பின் அவர், தி.நகரில் உள்ள இல்லத்தில் தங்கி ஒய்வெடுத்துவந்தார். அவரது வருகை தமிழக அரசியலிலும் அதிமுகவிலும் பெரும் மாறுதலை உண்டாக்கும் என பரவலாக பேசப்பட்டது. அதேபோல் அவரும், விடுதலையாகி சென்னை திரும்பியபோது வழியில், “விரைவில் தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” என தெரிவித்தார். ஆனால், சென்னை வந்த அவர் சில நாட்களாக அமைதி காத்துவந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் அன்று அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்துவிட்டு, “விரைவில் தொண்டர்களை சந்திப்பேன்” என தெரிவித்தார். ஆனால், அடுத்த சில நாட்களிலேயே அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பினார்.
அதன்பின் சமீபத்தில் தஞ்சாவூர் சென்ற சசிகலா, அவரது குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். பின் அவரது கணவர் நடராஜனின் நினைவிடம் சென்று மரியாதை செய்தார். மேலும், தஞ்சாவூரில் உள்ள அவரது குலதெய்வ கோவில், ஸ்ரீரங்கம் கோவில் உள்ளிட்டவற்றுக்கும் சென்றுவந்தார். இந்நிலையில், நேற்று (24.03.2021) வடசென்னையில் பிரசித்தி பெற்ற திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் திருக்கோயிலுக்கு சென்று வழிபட்டார்.
மறைந்த ஜெயலலிதா, கடந்த 1991ஆம் ஆண்டில் இந்தக் கோவிலுக்கு பிரம்ம முகூர்த்தத்தில் வருகை தந்து மூலஸ்தானத்தில் உள்ள அம்மனுக்கு வெள்ளி திருவாச்சி மற்றும் நிலை கதவுகளை வழங்கி வழிபட்டார். முதல்வரான பின்பு பலமுறை இக்கோவிலுக்கு வந்து அம்மனை வழிபட்டுள்ளார். இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் வடிவுடையம்மன் கோயிலுக்கு வந்து வழிபட்டார். அதேநேரத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஓ.பன்னீர்செல்வம் ஒரு தனியார் தொலைகாட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியில் சசிகலா குறித்த கேள்விகளுக்கு வெளிப்படையான பதிலையும், சசிகலா குறித்து பெருமைப்படுத்தும் விதமாகவும் பேசியிருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று காலை ஐந்து வருடங்களுக்குப் பின்பு சசிகலா வடிவுடையம்மன் கோயிலுக்கு வருகை தந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவுடன் திருக்கோயில் உதவி ஆணையர் சித்ராதேவி மற்றும் ஆலய பணியாளர்கள் இருந்தனர்.