




‘தை’ அறுவடை காலம் என்றால், ‘சித்திரை’ உழவைத் தொடங்கும் காலம். அதனால்தான், விவசாயிகள் சித்திரை முதல் நாளில் நல்லேர் பூட்டி விளை நிலங்களை உழவு செய்யத் தொடங்குகிறார்கள்.
தமிழர்களின் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் ஓர் அர்த்தம் இருக்கும். ஆடி விதைப்புக் காலம் என்பதால், அந்த மாதங்களில் கிராமங்களில் முளைப்பாரித் திருவிழாக்களை நடத்தி வீரியமான விதைகளை தேர்வு செய்து விவசாயத்திற்கு பயன்படுத்துகிறார்கள். அதேபோல ‘தை’ நெல் அறுவடை காலம் என்பதால் அறுவடை செய்த புது நெல்லில் பொங்கலிட்டு இயற்கையை வழிபட்டு கால்நடைகளுக்கு சிறப்பு செய்கிறார்கள். இப்படி தமிழர்களின் ஒவ்வொரு நிகழ்வும் வாழ்வியல் சார்ந்தே உள்ளது. அதில், ஒன்று தான் சித்திரை திருநாளில் நல்லேர் பூட்டி உழவு செய்தல்.
இன்று புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம், சேந்தன்குடி, பரவாக்கோட்டை உள்பட பல கிராமங்களிலும் விளை நிலத்தில் பூ, பழம் வைத்து வழிபட்டு உழவு மாடுகளை பூட்டி தீபம் காட்டி முதல் உழவைத் தொடங்கி வைத்தனர். பல கிராமங்களில் டிராக்டர்கள் மூலம் உழவைத் தொடங்கியுள்ளனர்.
மற்றொரு பக்கம், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டது. செரியலூர் தீர்த்த விநாயகர் உள்பட பல கிராமங்களிலும் உள்ள கோயில்களில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்தனர். கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சென்று வழிபட்டனர். மேலும், கரோனா காரணத்தினால், அன்னதானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.