
புதுக்கோட்டை மாவட்டம், வேப்பங்குடி ஊராட்சி பொற்பனைக்கோட்டை கிராமத்தில் சங்ககால கோட்டை இருப்பது கண்டறியப்பட்டு பல்வேறு காலக்கட்டங்களில் பல தொல்பொருள் ஆய்வாளர்களின் தேடலில் தமிழி எழுத்து கல்வெட்டு, இரும்பு உருக்கு கழிவுகள், அச்சு வார்ப்புகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கோட்டை பகுதியை முழுமையாக மேலாய்வு செய்த புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழகம் சார்பில் சங்ககால கோட்டை பகுதியில் அகழாய்வு செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் அகழாய்வுக்கு அனுமதி கேட்டிருந்ததால் மத்திய தொல்லியல் துறை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக் கழகம் பேராசிரியர் இனியனை இயக்குநராக கொண்டு அகழாய்வு செய்ய அனுமதி அளித்தது.
அகழாய்வுக்கான முதல்கட்ட பணியாக ஸ்கேன் மூலம் சில இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு இறுதியில் வேப்பங்குடி கருப்பையா என்ற விவசாயியின் நிலத்திற்கு அடியில் கட்டுமானம் இருக்க வாய்ப்பு உள்ளதாக நேற்று அகழாய்ப்வுப் பணி தொடங்கியது. பணிகளை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
8 மீட்டர் நீளம், அகலத்தில் ஒரு குழியும் 2 மீட்டர் நீளம், அகலத்தில் ஒரு குழியும் என இரண்டு குழிகள் அமைத்து அகழாய்வுப் பணிகள் தொடங்கி நடக்கிறது. இந்த பணியின் போது ஏராளமான வித்தியாசமான பானை ஓடுகளும், மணிகள், இரும்பு உருக்கு கழிவுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. எடுக்கப்படும் பொருட்களை சேகரித்து தனித்தனி பாக்கெட்களில் வைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் அகழாய்வு செய்யும் போது ஏராளமான பழமையான பொருட்கள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.