ஒரே நாளில் 80 குழந்தைகளை சேர்த்து சாதனை படைத்த அரசுப்பள்ளி மாணவர்கள் குறைவாக உள்ள அரசு பள்ளிகளை மூட அரசு திட்டமிட்டுள்ள நிலையில் அரசுப் பள்ளிகள் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் இளைஞர்களும் வீடு வீடாக பிரச்சாரங்களை செய்து விடுமுறை காலத்திலேயே மாணவர்களை சேர்த்தார்கள்.
ஆனால் புதுக்கோட்டையில் ஒரு அரசு பள்ளி சத்தமில்லாமல் ஒரே நாளில் ஒரு சாதனையை செய்துவிட்டது. பள்ளி தொடங்கும் முதல் நாள் பழைய மாணவ, மாணவிகள் புத்தக பைகளுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த நேரம்.
புதுக்கோட்டை அரசு உயர்தொடக்கப்பள்ளி வாசலில் ஆசிரியர்கள் வரும் முன்பே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சேர்க்க நீண்ட நேரம் காத்திருந்தனர். 9.30 மணி முதல் சரம் சரமாக வந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்தனர். மாலை வரை 80 மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டனர். அதில் 32 குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து அரசுப்பள்ளிக்கு மாறி வந்து சேர்ந்துள்ளனர்.
ஒரு தொடக்கப்பள்ளிக்கு 20 கி.மீ. தூரத்தில் இருந்தும் மாணவர்களை சேர்த்துள்ளனர். அதாவது குன்றாண்டார்கோயில், செம்பாட்டூர், ராஜாப்பட்டி, தர்கா, தென்னதிரையான்பட்டி, ஆகிய கிராமங்களில் இருந்தும் மாணவர்களை சேர்த்துள்ளனர் பெற்றோர். ராஜாப்பட்டி கிராமத்தில் இருந்து மட்டும் 10 குழந்தைகளை முதல் வகுப்பில் சேர்த்துள்ள பெற்றோர் வாகன வசதியும் செய்துள்ளனர்.
ஏன் இப்படி தூர கிராமங்களில் இருந்தும் சின்னக் குழந்தைகளை கொண்டு வந்து சேர்க்கனும்.. அருகில் அரசுப் பள்ளி இல்லையா? தனியார் பள்ளியில் படித்த குழந்தைகளையும் ஏன் அரசுப்பள்ளிக்கு கொண்டு வரனும் என்று மாணவர்களை சேர்க்க வந்த பெற்றோர்களிடம் கேட்டால்.. இந்த பள்ளியில படிப்பும், விளையாட்டு போல எல்லாமே தனித்திறனாக உள்ளது. தனியார் பள்ளியில பணத்தை கொடுத்துட்டு என் பள்ளை படிக்கலன்னு காத்திருந்தோம். இனி அந்த கவலை இல்லை என்றனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் என்.சிவசக்திவேல்.. எங்கள் பள்ளியில் எல்லாமே சிறப்பு தான். என்னுடன் சேர்த்து 9 ஆசிரியர்கள். முதல் 4 வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு முதல் ஏசி. வசதி செஞ்சுட்டோம். ஸ்மார்ட் டி.வி, பெயிண்டிங் எல்லாம் மாணவர்களை இழுக்கிறது. அதற்காண 1.70 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 130 மாணவ, மாணவிகள் இருந்தார்கள். அதில் 20 பேர் தேர்ச்சியாகி அடுத்த பள்ளிக்கு போறாங்க. இன்று முதல் நாளில் 80 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளார்கள். அதில் 32 பேர் தனியார் பள்ளியில் படித்துவிட்டு அரசுபள்ளியை தேடி வந்தவர்கள் என்பது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.
இன்னும் ஒரு வாரத்தில் மேலும் 50 மாணவர்கள் சேரலாம் என்று நினைக்கிறோம். மீதி வகுப்புகளுக்கும் ஏசி வசதி செய்ய சிலர் உதவி செய்ய முன்வந்துள்ளனர். பெற்றோர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம். இந்த வெற்றிக்கு அனைத்து ஆசிரியர்களின் பங்கும், பெற்றோர்களின் பங்கும் ரொம்ப முக்கியம். மத்திய, மாநில அரசு ஊழியர்களின் குழந்தைகள் 10 பேர் எங்கள் பள்ளிக்கு வந்து சேர்ந்துள்ளனர். அதில் ஒரு மத்திய அரசு ஊழியர் அனைத்து குழந்தைகளுக்கும் இன்று இனிப்பு வழங்கினார் என்றனர் என் குழந்தையும் இதே பள்ளியில் தான் படிக்கிறார் என்று பெருமிதமாக சொன்னார்.
இதே போல அனைத்து அரசுப் பள்ளிகள் மீது பெற்றோர்கள் நம்பிக்கை வைத்தால் தமிழ்நாட்டில் ஒரு அரசு பள்ளியை கூட அரசாங்கத்தால் மூட முடியாது.