தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் அருகே இருக்கும் பளியன்குடி மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்து உள்ளது. தமிழக - கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.
அது போல், இந்த ஆண்டு இக்கோவிலில் சித்ரா பவுர்ணமி திருவிழா நேற்று நடந்தது. பக்தர்கள் இதற்காக கேரள மாநிலம் தேக்கடி வழியாக ஜீப்களிலும், கூடலூர் அருகே பளியன்குடியில் இருந்து மலைப்பகுதி வழியாக நடந்தும் சென்றனர். இதற்கான ஏற்பாடுகள் இருமாநில அரசுகள் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
அதிகாலையில் கோவிலுக்கு விழாக்குழுவினர் சென்று கோவில் பகுதியில் மலர் தோரணங்களால் அலங்கரித்தனர். கண்ணகியை வழிபட இருமாநில பக்தர்களும் குவிந்தனர். சுமார் 18 ஆயிரம் பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகத்தில் தமிழக மற்றும் கேரள பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். கோவிலுக்கு வெளியில் டிராக்டர்களில் வைத்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவிலுக்கு செல்லும் வழியில் தமிழக மற்றும் கேரள வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வனப்பகுதியின் நுழைவுவாயிலில் மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வனப்பகுதியில் கோவில் அமைந்துள்ளதால் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டது. கோவிலுக்கு சென்று வரும் நேரத்தை கணக்கிட்டு பிற்பகல் 2.30 மணிக்கு பின்னர் குமுளியில் இருந்து பக்தர்கள் செல்வது தடை செய்யப்பட்டது.
பக்தர்களின் உதவிக்காக கோவிலிலும் செல்லும் வழியிலும் ஆம்புலன்சு வேன்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. கோவில் அருகில் மருத்துவக் குழுவினர் முகாமிட்டு சிகிச்சை அளித்தனர். தமிழக, கேரள மாநில தீயணைப்புப் படை வீரர்களும் கோவில் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
அதேசமயம், தேனி மாவட்ட நிர்வாகம் கண்ணகி கோவில் செல்லும் பக்தர்களுக்கு போதிய பஸ் வசதி ஏற்பாடு செய்யவில்லை என பக்தர்கள் அதிருப்தி தெரிவித்தனர். அதேபோல், பக்தர்களுக்காக குமுளியில் வழக்கமாகச் செய்யப்படும் கழிப்பறை வசதிகள் இந்த ஆண்டு சரிவர செய்யவில்லை என்றும் பக்தர்கள் தெரிவித்தனர்.