சின்னசேலம் அருகே உள்ள தகரை கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவேல் (வயது 48) விவசாயியான இவர் தனது விவசாய வேலைகளுக்காக சின்னசேலத்தில் உள்ள ஒரு வங்கியில் மாட்டு லோன் கேட்டிருந்தார். அதற்கான தொகையை அந்த வங்கி அவரது கணக்கில் செலுத்தி இருந்தது. சின்னசேலம் சாலையில் உள்ள வங்கிக்கு நேற்று காலை சென்ற மணிவேல் மாட்டு லோன் பணம் 60 ஆயிரம் ரூபாயை வங்கியில் இருந்து எடுத்தவர், அதை பையில் வைத்து தனது இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு தனது சொந்த ஊரான மூங்கில்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரது செல்போனுக்கு அழைப்பு வர நின்று செல்போன் பேசிவிட்டு புறப்படும் போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள், “நீங்கள் நின்ற இடத்தில் இருநூறு ரூபாய் நோட்டுகள் மற்றும் இருபது ரூபாய் நோட்டுகள் சில கீழே கிடந்துள்ளது. உங்கள் பணமா” என்று கேட்க, தனது பையில் இருந்த பணம் கீழே விழுந்து சிதறிவிட்டதாக எண்ணி தனது வாகனத்தை விட்டு இறங்கி அந்த பணத்தை எடுத்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர்கள் அவருக்கு உதவி செய்வது போல் அந்த பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்தனர். அவர் தனது வாகனத்தில் மாட்டியிருந்த பணப்பை பற்றிய கவனம் இல்லாமல் வீட்டுக்கு சென்றுள்ளார்.
வீட்டுக்கு சென்று பார்த்தபோது வண்டியில் மாட்டப்பட்டு இருந்த அந்தப் பணப்பை காணாமல் போயிருந்தது. அப்போதுதான் கீழே சில ரூபாய் நோட்டுகளை விசிறியடித்து தன் கவனத்தை திசை திருப்பி தனது 60 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த இரண்டு மர்ம நபர்கள் பறித்துச் சென்றது தெரிய வந்தது. பணத்தை பறிகொடுத்துவிட்டு பதறிப்போன மணிவேல் உடனடியாக சின்னசேலம் காவல் நிலையம் சென்று புகார் செய்துள்ளார். மணிவேலிடம் நூதன முறையில் பணம் பறித்த அந்த மர்ம நபர்களை போலீசார் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். அதேபோல் சில தினங்களுக்கு முன்பு அப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் சின்னசேலத்தில் உள்ள ஒரு வங்கியில் தனது கணக்கில் இருந்து 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு செல்லும்போது அவரது பணம் கொள்ளையடிக்கப்பட்டது. சின்னசேலம் நகரில் உள்ள வங்கிகளில் இருந்து பணம் எடுத்துக்கொண்டு வெளியே வரும் வாடிக்கையாளர்களைக் கண்காணித்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்று அவர்கள் கவனத்தை திசை திருப்பி பணத்தை இது போன்ற மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்கிறார்கள். இது போன்று தொடர்ந்து நடைபெறும் சம்பவங்கள் சின்னசேலம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.