கோவை சரவணம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக கோவை காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக கோவை காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ''கோவை சரவணம்பட்டி பகுதியில் இரண்டு குழந்தைகள் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவ வழக்கில் முதலாவதாக முதல் தகவல் அறிக்கையில் 174 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு முதற்கட்ட புலன் விசாரணை நடைபெற்றது. விசாரணைக்கு பின்பு 304 A அதாவது சரியாக பராமரிக்கப்படாத மின் இணைப்பால் ஏற்பட்ட விபத்து என்ற அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. அந்தக் குடியிருப்பு பகுதியில் பொது இடங்களில் விளக்கு எரிவதற்காக மண்ணுக்கு கீழே எலக்ட்ரிசிட்டி லைன் பொருத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக மின் கசிவு ஏற்பட்டு விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் இறந்துள்ளார்கள். அதனால் சட்டப்பிரிவு மாற்றப்பட்டுள்ளது.
யார் இந்த அலட்சியத்திற்குக் காரணம் என்பதைப் புலன் விசாரணை செய்து வருகின்றோம். இதில் முக்கியமாக எலட்ரிசிட்டி போர்டின் கைடு லைன்ஸ், கார்ப்பரேஷனின் அறிவுறுத்தல்கள், வழிகாட்டு முறைகள் இருக்கிறது. அவற்றுக்கெல்லாம் முறையான அனுமதி வாங்கிக்கொண்டு கேபிள் லைன் கொடுத்திருக்க வேண்டும். அதைப் பண்ணாதது அலட்சியம். அதைச் செய்த காண்ட்ராக்டர், ஸ்டாண்டர்ட் மெட்டீரியல் பயன்படுத்தாதது உள்ளிட்டவை குறித்து புலன் விசாரணையில் இருக்கிறது. விரைவில் புலன் விசாரணை முடிந்து யார் சரியாக பராமரிப்பு இல்லாததற்கு காரணம் என்று தெரிந்து அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.