புதுச்சேரியில் உள்ள தனியார் ஹோட்டலில் ஆசிரியர் தின விழா நடைபெற்றது. இதில் முதல்வர் நாராயணசாமி, துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய ஆளுநர் கிரண்பேடி, "குழந்தைகளை பள்ளியில் இருந்து வரும்போது பெற்றோர்கள் நன்றாக கவனித்து வளர்த்தால், அவர்கள் நல்லவர்களாக வளருகின்றார்கள். பெற்றோர்கள் தான் குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள், குழந்தைகளை உருவாக்குவதில் பெற்றோர்களின் பங்கு அதிகம். ஆசிரியர்களும் குழந்தைகளும் நல்லுறவு நன்றாக இருக்க வேண்டும். பிரகாசமான சமுதாயத்தை உருவாக்க ஆசிரியர்களும், பெற்றோர்களும் இணைந்து குழந்தைகளை உருவாக்க வேண்டும்" என்றார்.
முதலமைச்சர் நாராயணசாமி பேசும்போது, "இந்தியாவில் உள்ள அரசு பள்ளியில் புதுச்சேரி பள்ளி தூய்மை பள்ளி விருது பெற்றுள்ளது. இதற்கு தலைமையாசிரியர் முக்கிய பங்கு வகித்தார். அது போன்ற பள்ளிகள் வளரவும், மாணவர்கள் வளரவும் ஆசிரியர்கள் பாடுபட வேண்டும். புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் விரைவில் தரம் உயர்த்தப்படும் என முதலமைச்சர் நாரயணசாமி தெரிவித்தார்.