கர்நாடகாவின் கேஆர்எஸ் அணையில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்ட நீர், ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடந்தபோது, தமிழகத்தின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக ஒப்பந்தப்படி, காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. அப்போது, மழைக்காலத்தில் அணைக்கு நீர் வரத்து வரும்போது தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது.
இதையடுத்து ஜூலை 16ம் தேதியன்று, கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 850 கன அடி தண்ணீரை காவிரியில் அம்மாநில அரசு திறந்துவிட்டது. இந்த நீர், முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதியான பிலிகுண்டுலுவுக்கு ஜூலை 19ல் வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தண்ணீர் வந்து சேரவில்லை.
இந்நிலையில், ஜூலை 19ல் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக உயர்ந்து அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
காவிரியில் நீர் வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, ஜூலை 20ம் தேதி அதிகாலையில் பிலிகுண்டுலுவுக்கும், அதன் வழியாக ஒகேனக்கல்லுக்கும் தண்ணீர் வந்தடைந்தது.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ''கேஆர்எஸ் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால், பிலிகுண்டுலுவுக்கு தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது. நீர் வரத்தின் அளவு குறித்து பிலிகுண்டுலு காவிரியில் ஆய்வு செய்துள்ளோம். பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றுப்படுகையிலும் தண்ணீர் வந்து சேர்ந்துள்ளது,'' என்றனர்.
இது ஒருபுறம் இருக்க, மேட்டூர் அணைக்கு கடந்த இரு நாள்களாக தண்ணீர் வரத்து 253 கன அடியாக இருந்தது. இப்போது நீர் வரத்து 217 கன அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர் வரத்தைக் காட்டிலும் நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், அணையின் நீர் மட்டம் சரிந்து வருகிறது.
நேற்று (19.7.2019) 39.91 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று 39.59 அடியாக குறைந்தது. நீர் இருப்பு 11.88 டிஎம்சியாக இருந்தது.