கடந்த மாதம் முதல் பள்ளி செல்லாத குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணியில் கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஏராளமான குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில்தான், புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் கீரமங்கலம் அருகில் உள்ள எல்.என்.புரம் ஊராட்சி சுக்கிரன்குண்டு பகுதியில் குளக்கரையோரம் வசிக்கும் குடும்பங்களில் ஏராளமான பள்ளி வயது குழந்தைகள் உள்ளனர். அவர்களில் பலர் பள்ளிக்குச் செல்லவில்லை. சிலர் தங்கள் குழந்தைகளைக் கூலிக்கு ஆடு மேய்க்க அனுப்பியுள்ளனர். அந்தக் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கல்வித்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு நேற்று (24/08/2021) கொண்டு சென்றோம்.
நமது கோரிக்கை குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி, அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் திராவிடச்செல்வம் ஆகியோர் சம்மந்தப்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்கள், எஸ்.எஸ்.ஏ. அலுவலர்களிடம் உடனடியாக சுக்கிரன்குண்டு கிராமத்தில் பள்ளி செல்லா குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவையடுத்து இன்று (25/08/2021) காலை எஸ்.எஸ்.ஏ. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மணிமாறன், வட்டாரக் கண்காணிப்பாளர் செல்வராசு, வட்டாரக் கல்வி அலுவலர் மலர்விழி மற்றும் எல்.என்.புரம், பட்டிபுஞ்சை, காசிம்புதுப்பேட்டை, புளிச்சங்காடு, கரம்பக்காடு பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் சுக்கிரன்குண்டு கிராமத்தில் வீடு வீடாக சென்று, பள்ளி வயது குழந்தைகள் பற்றிய விபரங்களை சேகரித்து, உடனே பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தியதுடன் பல மாணவ, மாணவிகளை அதிகாரிகளே அழைத்துச் சென்று பள்ளியில் சேர்த்தனர். மேலும், ஆடு மேய்க்கச் சென்றுள்ள மாணவர்களையும் மீட்டு பள்ளியில் சேர்ப்போம் என்று அதிகாரிகள் கூறினார்கள்.
சுக்கிரன்குண்டு கிராம மக்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து காசிம்புதுப்பேட்டை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பசீர்அலி மற்றும் ஒன்றியக் கவுன்சிலர் முருகேசன் ஆகியோர் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அதே பகுதியில் 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்ல வசதியில்லாமல் இருந்த ஒரு மாணவியின் கல்லூரி படிப்பிற்கு பசீர் அலி உதவிகள் செய்வதாகக் கூறினார்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, "50 வருடங்களுக்கு மேலாக வசிக்கிறோம். பல பேருக்கு வீட்டுமனைப் பட்டா, வீடு இல்லை. குளத்துக்கரையில்தான் குடியிருக்கிறோம். அதனால் ரேசன் கார்டு இல்லை. அதனால தினமும் கூலி வேலைக்குப் போனால்தான் சாப்பிட முடியும். எங்களுக்கு வீடுகட்ட இடம் கொடுக்க வேண்டுமென்று பல வருடமாகக் கேட்கிறோம்; யாரும் கண்டுகொள்ளவில்லை" என்றனர்.
நக்கீரன் கோரிக்கையால் பல மாணவர்கள் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்த கல்வித்துறை அதிகாரிகளுக்கு நன்றிகள். இதேபோல அறந்தாங்கி ஒன்றியம் மேற்பனைக்காடு மேற்கு புதுக்குடியிருப்பு பகுதியிலும் பள்ளி வயது குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதையும் அதிகாரிகள் கவனித்தால் நல்லது.