கரோனா கிருமி தொற்றை பரவாமல் தடுக்க ஒரே வழி அனைவரும் அவரவர் வீடுகளில் அமைதியாக இருப்பதே சிறந்தது என்று இன்று ஒரு நாள் சுய ஊரடங்கு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதே போல எத்தனையோ பந்த்கள் அறிவிக்கப்பட்டும் 10, 20 சதவீதம் கடைகள் திறந்திருந்து பார்த்திருக்கிறோம். ஆனால் சுய ஊரடங்கில் கிராமங்களில் கூட ஒற்றை டீ கடைகள் கூட அடைக்கப்பட்டு இருந்தது.
கடைகள் திறந்திருப்பதைவிட வாகனங்கள் செல்வதும் அதை யாராவது மறிப்பதும் என்ற சம்பவங்கள் நடந்த வரலாறுகள் உண்டு. ஆனால் சுய ஊரடங்கில் சாலைகள் சுத்தமாக காணப்பட்டது. ஒரு வாகனம் கூட சாலையில் செல்லவில்லை. அதனால் ஒலி மாசு, புகை மாசும் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டு சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட்டது. இதே நிலை தான் கிராமங்களிலும் நீடித்தது. இந்த ஒரு நாள் வாகனப் போக்குவரத்துகள் நிறுத்திக் கொண்டதால் எரி பொருள் சிக்கனத்துடன் புவி வெப்பமடைதலும் குறைந்திருந்தது.
நகரின் நெருக்கடியான சாலைகள் வெறிச்சோடிக் கிடந்ததைப் பார்த்த இளைஞர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் பெரிய கடைவீதிகள் தொடங்கி சிறிய தெருக்கள் வரை எங்கும் அமைதி. ஒரு சில இடங்களில் திருமணம், நிச்சயதார்த்தம் நடந்த போது கூட அதற்கு மோட்டார் சைக்கிள்களில் சிலர் சென்று கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள பள்ளத்திவிடுதியில் இன்று நடக்க இருந்த காதணி விழாவை சுய ஊரடங்கு அறிவிப்பால் தேதியை மாற்றி வைத்துவிட்டார்கள்.
தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் சாலை ஓரங்களிலும், பேருந்து நிலையங்களிலும் படுத்திருந்த மனநிலை பாதிக்கப்பட்ட உடல் நலம் குன்றிய, முதியவர்களுக்கு தன்னார்வலர்கள் வீடுகளில் சமைத்த உணவுகளை வழங்கினார்கள். உணவு கொடுக்கச் சென்ற இளைஞர்களிடம் வாக்குவாதம், தள்ளுமுள்ளு செய்ததாக போலிசார் மீது புகார் கூறியுள்ளனர்.
மாலை 5 மணிக்கு கிராமங்கள் தொடங்கி நகரங்கள் என அனைத்து இடங்களிலும் கரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க தங்கள் உயிரை கொடுத்து பணியாற்றி வரும் மருத்துவத் துறையினர், துப்புறவுப் பணியாளர்கள், வருவாய் துறையினர், காவல் துறையினர், பத்திரிக்கை, ஊடகத்துறையினரை பாராட்டி குழந்தைக்ள முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கைதட்டி பாராட்டினார்கள்.