சேலத்தில், காவல்துறை ஆய்வாளர் உள்ளிட்ட மூவர் ஏற்கனவே கரோனா பாதிப்பில் இருந்து சிகிச்சைக்குப் பிறகு மீண்டு வந்துள்ள நிலையில், அவர்களுக்கு இரண்டாம் முறையாகக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, காவல்துறையினர் வட்டாரத்தில் கிலியை ஏற்படுத்தி உள்ளது.
சேலத்தில், கரோனா பரவலின் ஆரம்பத்தில் கட்டுக்குள் இருந்த நோய்த்தொற்று, கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு பரவலின் வேகம் அதிகரித்தது. தற்போது தினமும் சராசரியாக 300 பேருக்கு மேல் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அறிக்கை கூறுகிறது.
நோய்த்தொற்றால் சாமானியன் முதல் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டு இருந்தாலும், மாநகர காவல்துறையினர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாநகர காவல்துறை ஆணையர் செந்தில்குமார், துணை ஆணையர் செந்தில், உதவி ஆணையர்கள் ஆனந்தகுமார், நாகராஜன் மற்றும் 5 காவல் ஆய்வாளர்கள் உள்பட 170- க்கும் மேற்பட்ட காவலர்களும் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இவர்களில் 158 பேர் சிகிச்சை பெற்று மீண்டும் பணிக்குத் திரும்பினர். 2 சிறப்பு உதவி ஆய்வாளர்கள் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, சேலம் அன்னதானப்பட்டி காவல் ஆய்வாளர் சரவணன், பெண் தலைமைக் காவலர் உள்பட 3 பேர் ஏற்கனவே கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தனர். அவர்கள் குணமடைந்து மீண்டும் பணிக்குத் திரும்பினர்.
இந்நிலையில், தற்போது அவர்கள் மூன்று பேருக்கு மீண்டும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டது. ஆய்வாளருடன் நெருக்கமாக இருந்த காவலர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஒருமுறை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்த ஓராண்டுக்குள் மறுமுறை தாக்காது என்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், கரோனாவில் இருந்து மீண்டு வந்த காவல்துறையினருக்கு குறுகிய காலத்திலேயே நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது காவல்துறையினர் வட்டாரத்தில் கிலியை ஏற்படுத்தி உள்ளது.