சேலத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய வெள்ளிக் கொலுசுகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கந்தம்பட்டியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர் பிரபாகரன் தலைமையில் ஊழியர்கள் புதன்கிழமை (மார்ச் 3) இரவு, வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மடக்கி சோதனை நடத்தினர்.
அதில், மூன்று பெரிய பைகளில் புது வெள்ளிக் கொலுசுகள், 13 கட்டாக கட்டி எடுத்துச் செல்வது தெரிய வந்தது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர், செவ்வாய்பேட்டை தாண்டவராயன் நகரைச் சேர்ந்த சந்திரகாந்த் (40) என்பது தெரிய வந்தது.
அவரிடம் விசாரித்தபோது, பனங்காடு பகுதிக்கு கொலுசுகளை மொத்த விற்பனைக்குக் கொண்டு செல்வதாகக் கூறினார். ஆனால், மொத்த விற்பனையாளர் யார் என்ற விவரங்கள் தனக்குத் தெரியாது என்றும் கூறினார். அதேநேரம், அவர் கொண்டு சென்ற கொலுசுகளுக்கு உரிய ஆவணங்களும் இல்லை. இதையடுத்து அவரிடம் இருந்த 74.73 கிலோ கொலுசுகளைப் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 35 லட்சம் ரூபாயாகும். பறிமுதல் செய்யப்பட்ட கொலுசுகள் சேலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.