நாகையில் சிறுவன் ஒருவன் பஞ்சவர்ண கிளிகளை திருடியதால் ஜவுளி கடைக்குள் வைத்து பூட்டி வைத்து சித்ரவதை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. சிறுவனை மீட்ட வெளிப்பாளையம் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
நாகப்பட்டினம் புதுத்தெரு பகுதியை சேர்ந்த தாரிக் என்பவர் தனது வீட்டில் பஞ்சவர்ண கிளிகளை வளர்த்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அவரது வீட்டில் இருந்த 15 ஆயிரம் மதிப்புள்ள பஞ்சவர்ண கிளிகள் திருட்டுப் போய் உள்ளது. இதனை சுதாரித்து கொண்ட தாரிக் மிஞ்சியிருந்த கிளிகள் மீது கவனத்தில் இருந்தார். இந்தநிலையில் நேற்றைய முன்தினம் அவரது வீட்டில் இருந்த கிளிகளை சிறுவர்கள் திருடி தப்பி செல்வதை பார்த்துள்ளார். அதனைத் தொடர்ந்து விசாரணையில் கிளிகளை திருடி சென்ற சிறுவன் திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் பகுதியை சேர்ந்த முஸ்தபா என்பது தெரியவந்தது.
பின்னர் கிளி உரிமையாளரான தாரிக் மற்றும் அவரது நண்பர் பரக்கத்துல்லா ஆகியோர் திருவாரூர் சென்று சிறுவனை பிடித்து இழுத்துக்கொண்டு நாகை தம்பிதுரை பூங்கா அருகில் உள்ள தனது கடைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது சிறுவனிடம் அவர்கள் கேட்ட கேள்விக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னதால் சிறுவனை கடையில் அடைத்து வைத்து சித்தரவதை செய்துள்ளனர். இன்று பக்ரீத் என்பதால் சிறுவனை கடைக்குள் வைத்து பூட்டி விட்டு தாரிக்கும், பரக்கத்துல்லாவும் தொழுகைக்காக சென்றுள்ளனர். இதனால் பயந்துபோன சிறுவன் கடையினுள் இருந்த பெபிகால் திரவத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளான். பூட்டிய கடைக்குள் இருந்து சிறுவனின் அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வெளிப்பாளையம் போலிசார் கடை உரிமையாளரை வைத்து பூட்டியிருந்த கடையை திறந்துள்ளனர். அங்கு மயங்கிய நிலையில் இருந்த சிறுவனை மீட்ட போலிசார் சிகிச்சைக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். நாகையில் பஞ்சவர்ண கிளிகள் திருடிய காரணத்திற்காக சிறுவன் கடைக்குள் பூட்டி வைத்து தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.