தமிழ்நாடு அரசு பல்வேறு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதன் அடிப்படையில் அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு, பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரில் சென்று அதிகாரிகளிடம் ஆலோசனை, விழிப்புணர்வு, செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டங்களை நடத்தி வருகிறார்.
அவ்வகையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு அதிகாரிகளிடம் நேற்று (06.06.2021) இரவு நோய் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். இதில் ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா சிங், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் காஞ்சனா மற்றும் சுகாதாரத் துறையினர், வருவாய் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது தலைமைச் செயலாளர் இறையன்பு, "தமிழகம் முழுவதும் நோய் பரவல் உள்ளது. இருந்தும் நகரப் பகுதிகளை விட கிராமப்புறங்களில்தான் நோய்த் தொற்று அதிகமாக பரவியுள்ளது. இதனை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். அதிலும் விழுப்புரம் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் நோய்த்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை முழுமையாக கட்டுப்படுத்தி நோய்த் தொற்று இல்லாத நிலையை மாவட்டத்தில் உருவாக்க வேண்டும்.
ஒரு தெருவில் மூன்று பேர்களுக்கு மேல் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால் அப்பகுதியைத் தனிமைப்படுத்த வேண்டும். அவர்களுக்குத் தேவையான காய்கறி, மளிகை போன்ற பொருட்களை உடனுக்குடன் ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். வெளியாட்கள் யாரும் அப்பகுதிக்குச் செல்லாதவாறு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும். மருத்துவ முகாம்கள், பரிசோதனை முகாம்கள், தடுப்பூசி செலுத்தும் முகாம்களை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கடைகள் திறந்தால் பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் கூடும். அப்படி அதிக அளவில் கூட்டம் சேராத வகையில் அதிகாரிகளும் காவல்துறையினரும் சேர்ந்து ரோந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தனிமனித இடைவெளியை வியாபார நிறுவனங்கள் கடைப்பிடிக்க வேண்டும். அதைக் கடைப்பிடிக்காத வியாபார நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.