தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் தூய்மை பணியாளர்களுக்கு 1,400 ரூபாய் ஊதிய உயர்வு கூடுதலாக வழங்கிய தமிழக முதல்வர் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தமிழ்நாடு மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் நலச் சங்கத்தினர் பாராட்டி நன்றி தெரிவித்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினரும், திமுக மாநில துணைப்பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமியின் இல்லத்தில் ஆத்தூர் தொகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்க குவிந்த வண்ணம் இருந்தனர். வேலைவாய்ப்பு, சமுதாயக்கூடம், கிராம ஊராட்சிகளில் நாடகமேடை, சாலை வசதி, வேண்டி கோரிக்கை மனுக்களை கொடுத்து தீர்வு பெற்றனர். தமிழகத்தில் உள்ளாட்சித் துறையில் குறிப்பாக கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு ரூபாய் 1,400 கூடுதலாக வழங்கிய தமிழக முதல்வருக்கும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும் நன்றி தெரிவிக்கும் வண்ணம் தமிழ்நாடு மேல்நிலைப்பட்டி இயக்குபவர்கள் மற்றும் தூய்மை காவலர்கள், தூய்மைப் பணியாளர் நல சங்கத்தின் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி, மாநில பொதுச் செயலாளர் ராமலிங்கம், மாநிலப் பொருளாளர் ஆறுமுகம், மாநில துணைத்தலைவர்கள் தங்கவேல், அந்தோணி தாஸ், ரமேஷ், சந்திரசேகர் மற்றும் மாநிலச் செயலாளர்கள் கனி, பரமசிவன், முத்துசாமி, வேலு, சேதுராமன் தலைமையில் தூய்மை பணியாளர்கள் 400 பேர் அமைச்சர் பெரியசாமியை நேரில் சந்தித்து தங்களின் பாராட்டையும் நன்றியையும் தெரிவித்தனர்.
அவர்கள் மத்தியில் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ''அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்கும் அரசுதான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்த திராவிட மாட ல் அரசு. கரோனா தொற்று காலத்தின் போது நீங்கள் ஆற்றிய பங்கு மகத்தான சாதனையாகும். இதை தான் கருத்தில் கொண்டுதான் தமிழக முதல்வர் அவர்கள் உங்களுக்கு 1,400 கூடுதலாக வழங்கியுள்ளார்கள். உங்கள் சேவைக்கு கிடைத்த வெகுமதியாக நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும். இதுபோல் கிராம ஊராட்சிகளில் மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்களுக்கும் ஊதிய உயர்வு கிடைக்கும். தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன்'' என்று கூறினார்.