
குடிபோதையில் இருந்த சில நபர்கள், மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவர்களைத் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், ஹாசன் மருத்துவக் கல்லூர் மற்றும் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், குடிபோதையில் இருந்த சில நபர்கள் நேற்று இரவு இந்த மருத்துவமனைக்குள் புகுந்து முதுகலை பட்டதாரி மற்றும் மருத்துவர்கள் உள்பட ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திடீரென அவர்கள்,மருத்துர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். திடீரென ஏற்பட்ட வன்முறை, மருத்துவர்கள், நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களிடையே பீதியை ஏற்படுத்தியது. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை பிடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த வன்முறையைக் கண்டித்தும், பணியில் இருக்கும்போது தங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்கக் கோரியும், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.