
கிராம சபைக் கூட்டங்கள் போல இனி நகர சபை, மாநகர சபைக் கூட்டங்கள் நடைபெறும் எனவும், வரும் நவம்பர் 1ம் தேதி முதல் இந்த கூட்டங்களை நடத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான ஆய்விற்காக ஒவ்வொரு வார்டிலும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தலைவராக கவுன்சிலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மலில் 6வது வார்டு மாநகர சபைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மக்களிடம் குறைகளைக் கேட்டு அறிகிறார்.
கிராம சபைக் கூட்டங்களைப் பொறுத்தவரையில் மக்களின் குறைகளும் அங்கு நடைபெற்று முடிந்த பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்த விவரங்கள் கேட்கப்படும். அதற்கான அரசின் கவனமும் பெறப்பட்டு நிறைவேற்றப்படாத திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
அதேபோல் இனி நகர்ப் பகுதிகளில் வாழும் மக்களின் குறைகளையும் நகர சபைக் கூட்டங்கள் மற்றும் மாநகர சபைக் கூட்டங்கள் மூலம் நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.