1948-க்குப் பிறகு காங்கிரஸ் அரசால் தடைசெய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் இளைஞர் ஒருவரை உயிருடனோ அல்லது சுட்டுப் பிணமாகவோ பிடித்திட, இன்றைய புதுக்கோட்டை மாவட்டம் பனங்குளம் கிராமத்தில் போலீஸார் புடைசூழ நுழைகிறார்கள். அந்தக் கிராமத்து மணியக்காரரைப் பிடித்து “உன் மகன் எங்கே? சொல்” என்று அடித்து உதைத்து அவரைப் புளியமரத்தில் கட்டிவைக்கிறார்கள். அந்த இளைஞரின் நண்பர்கள் வீட்டை அடித்து நொறுக்குகிறார்கள். அந்தக் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட மக்களைத் துன்புறுத்தி, அவர்களை முழங்காலால் முட்டிபோடவைத்து ரோட்டின் மேல் தவழவிடுகிறார்கள். அந்தக் கொடூர சம்பவத்தால் அந்தக் கிராம மக்களே போலீஸாரின் கெடுபிடிக்குப் பயந்து தலைமறைவு வாழ்க்கை மேற்கொள்கிறார்கள். அப்படி போலீஸாரால் தேடப்படும் “அந்த இளைஞர்தான் யார்?” அவர்தான்... சமூக நீதிக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய பண்பாளர். புதுமையான புரட்சிகரமான பொது நோக்குப் பாதையிலே பயணம் மேற்கொண்டவர். தன்னலம் கருதாது பிறர்நலம் பேணும் தலைவராக வாழ்ந்தவர். உழைக்கும் மக்களின் உரிமைக் கிளர்ச்சிக்குத் தீமூட்டி, அவர் தம் வாழ்வில் முன்னேற்றமும் எழுச்சியும் பெறுவதற்கு தம் வாழ்நாள் முழுவதும் தொண்டால், செயலால் தூயபணி ஆற்றிவந்த சுதந்திரப் போராட்டத் தியாகி, பொதுவுடைமை இயக்கத்தின் முதுபெரும் தலைவர், மக்கள் தொண்டர், தோழர் எம்.மாசிலாமணி. “எம்.எம்” என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்பெறும் தொண்டால் உலகளந்த தூயவர்.
பிறப்பு :
1923 இல் பனங்குளம் கிராமத்தில் முத்துக் கருப்பமணியக்காரருக்கும் சுந்தரம்பாள் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். இவருக்கு நான்கு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இருந்தனர்.
பள்ளிப்பருவம்:
இவர் பனங்குளத்திலும், கீரமங்கலத்திலும் ஆரம்பப்படிப்பை முடித்துக் கொண்டு, ஒரத்தநாடு உயர்நிலைப் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார். தமிழக வருவாய்த்துறை முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் இவருடன் பயின்ற வகுப்புத் தோழர். 1941-இல் அங்கு பயின்ற மாணவர்கள் விடுதலை உணர்வையூட்டும் ‘தேசிய மாணவர் சம்மேளனம்’ என்ற அமைப்பினைத் தோழர் இராமகிருஷ்ணன் முயற்சியில் உருவாக்கினர். 'எம்.எம்'. அவர்கள் அதன் செயலராகப் பணியாற்றினார். இவ்வியக்கத்தில் இருந்த போதே குடந்தை இஸ்மத் பாட்ஷா, மாயாண்டிபாரதி இவர்களின் தொடர்பு கிடைத்துள்ளது. தீவிர அரசியல் ஈடுபாட்டால் பள்ளிப்படிப்பை இவரால் தொடரமுடியவில்லை.
அரசியல் பொதுவாழ்வின் தொடக்கம்:
பள்ளிப்படிப்பு முடிவுற்றதும் ஊரில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு ஆதரவாகவும் நில ஆதிக்க முறையை எதிர்த்தும் இவர் முற்போக்கு சிந்தனையுடன் செயல்பட்டார். 1943இல் தோழர் கே.பி.நடராசன் தலைமையில் ஜெமீன்தார் எதிர்ப்பு இயக்கம், புதுக்கோட்டை மாவட்டத்தில் நிகழ்கிறது. இளைஞர் எம்.எம். இவ்வியக்கத்தில் இணைந்து கொண்டு அவர்களோடு பட்டுக்கோட்டை சென்று கம்யூனிஸ்டு கட்சியில் சேவையைத் தொடர்கிறார். முதலில் உண்டியல் குலுக்கவிட்டனர். 1942இல் இந்திய சோவியத் நண்பர் குழு (இஸ்கஸ்) பட்டுக்கோட்டையில் அமைத்தார். 1943இல் வங்கத்தில் ஏற்பட்ட பஞ்சத்திற்கு நிவாரண நிதி திரட்டி அனுப்பினார். பட்டுக்கோட்டை வட்டார கட்சியின் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1944 மே மாதம் 3,4 தேதிகளில் மன்னையில் நிகழ்ந்த மாநாட்டில் முக்கியத் தலைவர்களின் ஒருவராகத் திகழ்ந்தார். தோழர்கள் சீனிவாசராவ், இராமகிருஷ்ணன், பி.இராமமூர்த்தி, மணலி கந்தசாமி போன்ற பெருந்தலைவர்களோடு இணைந்து பணியாற்றினார்.
எம்.எம்.திருமணம் :
17.03.1952இல், இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த எம்.கே.சோமசுந்தரம்பிள்ளை அவர்களின் புதல்வி மனோன்மணி அவர்களுக்கும் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அனந்தநம்பியார், ஏ.வைத்திலிங்கம் முன்னிலையில் சீர்திருத்த திருமணம் நடைபெற்றது. இது முதலாக வாழ்வின் இறுதிவரை 250க்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு இவர் தலைமையேற்று சீர்திருத்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளார்.
கோட்டாட்சியர் முன் குடும்ப அட்டைப் போராட்டம் :
1943-44ஆம் ஆண்டுகளில் நகர்ப்புற மக்களுக்கு மட்டும்தான் குடும்ப அட்டை வழங்கப்பட்டு, வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கப்பட்டன. கிராமப்புற மக்களுக்கு குடும்ப அட்டை பெறுவது எட்டாக் கனியாக இருந்து வந்தது. பட்டுக்கோட்டை, ஆம்பலாப்பட்டில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்களைத் திரட்டி பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தி அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்கச் செய்தார். ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களைத் தீண்டத்தகாதவர் என தள்ளிவைத்த போது எல்லாவகையிலும் மற்றவர்களோடு இணையாக சம உரிமை பெற்றிடக் கோரி நடத்திய பல்வேறு போராட்டங்களையும் கிராமங்கள் தோறும் நிகழ்த்தி வெற்றிகண்ட இயக்கமாக இயக்கத்தை நடத்திச் சென்றார். இதன் பயனாக தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உன்னத அன்பைப் பெற்றார்.
சிறை வாழ்க்கை :
‘ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்’ எனும் அமரர் ஜீவாவின் வழி நின்று பல்வேறு போராட்டங்களில் சிறை சென்றுள்ளார். நாடு சுதந்திரம் பெற்றபின் (1948-51) கட்சி இரண்டாவது முறையாகத் தடைசெய்யப்பட்டது. இவர் பிறந்த பனங்குளம் கிராமத்தில், இவரது தந்தை முத்துக்கருப்ப மணியக்காரரையும், இவரது உறவினர்கள் பலரையும் காவல்துறையினர் புளியமரத்தில் கட்டிவைத்து 400க்கும் மேற்பட்டவர்களை அடித்து உதைத்து மிதித்து சித்திரவதை செய்துள்ளனர். கிராம மக்களை முழங்காலால் முட்டிபோடவைத்து ரோட்டின் மேல் நடக்க வைத்துள்ளனர். இவர்களது நண்பர் குளமங்கலம் கண்ணப்பன் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர். இவராலும், இவரைச் சார்ந்த இயக்கத்தாலும் இவ்வட்டாரமே கொடுமை அடைந்துள்ளது. அடிபட்டவர்களுள் வெள்ளையன்பிள்ளை, முருகையாபிள்ளை, குளமங்கலம் அய்யாச்சாமித்தேவர், வீரமுத்துத்தேவர், குழந்தைசாமி மணியாரர், முத்துராமலிங்கம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்.
1948இல் பாதுகாப்புக் கைதியாக எம்.எம்; கைது செய்யப்பட்டு இரண்டாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளானார். 1949-51இல் இரண்டாவது முறையாக கட்சி தடை செய்யப்பட்டது. பாதுகாப்புச் சட்டத்தின் அடிப்படையில் தோழர் எம்.எம். அவர்களைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 1961-இல் நில உச்சவரம்புச் சட்டம் கோரி நடந்த மிகப்பெரும் போராட்டத்தில் இவரும், இவரின் சகதோழர்களும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் வீரக்குடி தோழர் பெருமாளும், மன்னங்காட்டு மாரியும் 1961- அக்டோபர் 23இல் திருச்சி சிறைச்சாலையில் மரணமடைந்தனர்.
வேலூர், திருச்சி, சென்னை மத்திய சிறை உட்பட 16 முறை சிறை சென்றுள்ளார். ஐந்து ஆண்டுகள், பத்து மாதங்கள், சிறை வாழ்க்கை அனுபவித்துள்ளார். 117 நாட்கள் உண்ணாநோன்பு மேற்கொண்டுள்ளார். 23 நாட்கள் தொடர்ந்தாற்போல் உண்ணா நோன்பிருந்து இரத்த வாந்தி எடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காவல் துறையினரின் தடியடிக்கு உள்ளாக்கப்பட்டு இவரும், இவரது சக தோழர்களும் பின்னாளில் நரம்பு தளர்ச்சி நோய்க்கு இலக்காயினர்.
உதவித்தொகையை உதறியவர் :
சுதந்திரப் போராட்ட தியாகிகள் பட்டியலில் தஞ்சை மாவட்டத்தில் ஐந்தாவது இடத்தில் இவர் இடம்பெற்றுள்ளார். 25.12.1975இல் பட்டுக்கோட்டை தாலுகா சுதந்திரப் போராட்ட வீரர் மன்றம், இவரின் சேவையைப் பாராட்டி இவருக்குத் தியாகிகளுக்கான நற்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தது. சுதந்திரத் தியாகிகளுக்காக அரசு கொடுக்கும் தொகையை இவர் வாங்க மறுத்துள்ளது பெருமைக்குரிய செய்தியாகும்.
தேர்தலும் ஆறுதலும்:
மக்களாட்சி முறையில், மக்களின் வாக்குகளைப் பெற்று சட்டமன்றம் முதலாக பல்வேறு அமைப்புகளில் போட்டியிட்டுள்ளார்.
1954 - (ஜில்லாபோர்டு) பட்டுக்கோட்டைத் தொகுதி, 1962 – பட்டுக்கோட்டை சட்டமன்றத்தொகுதி, 1967 – பேராவூரணி சட்டமன்றத் தொகுதி, 1974 – சட்டமன்ற மேலவைத் தொகுதி, 1977 – பேராவூரணி சட்டமன்றத் தொகுதி.
மேற்கண்டவாறு போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி வாய்ப்பை இழக்கிறார். தோல்வியைக் கண்டு துவண்டு விடாது, தேர்தலில் மக்கள் புறக்கணித்தாலும், தன் கடமையை மறவாது இறுதி மூச்சுவரை தொண்டாற்றி வந்துள்ளார். இவர் பட்டுக்கோட்டை நாடிமுத்துநகர் பால்வள கூட்டுறவு சங்கத்தை உருவாக்கி அதன் இயக்குநராகச் செயலாற்றியுள்ளார். நகர கூட்டுறவு வங்கியின் இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். நகராட்சி உறுப்பினராகத் தேர்வு பெற்று எல்லாரும் வியக்கும் வண்ணம் கடமையாற்றியுள்ளார்.
அலைகடலுக்கு அப்பால் பயணங்கள் :
இயக்கத்தில் நீண்ட நாட்கள் பணியாற்றியதைத் தொடர்ந்து 1975ஆம் ஆண்டில் மாஸ்கோ பயணம் மேற்கொண்டார்.1977-இல் இலங்கை சென்று இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களின் நிலையையும் இலங்கைவாழ் மக்கள் வாழ்க்கை நெறிகளையும் அறிந்து தாயகம் திரும்பினார்.
தோழமைக்கு அப்பாலும் தோழமை :
இவர்தம் அரசியல் பணியில், தனது கட்சியில் மட்டும் அல்லாது ஜாதி மதம் கடந்த நிலையில் பிற இயக்கத் தோழர்களிடத்தும் நெஞ்சார்ந்த நட்புக் கொண்டவர். இவரைப்பற்றி தஞ்சை ஏ.வி.இராமசாமி அவர்கள், “எம்.எம். இயல்பில் எல்லோரிடமும் பழகும் குணம் வாய்ந்தவர். பிறகட்சித்தலைவர், தொண்டர்களிடமும் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருப்பவர். தம் கட்சிப் பணிகளோடு தம் மண்ணுக்கும் மரபிற்கும் ஏற்றவகையில் நீதி வழுவாது பெரிய பெரிய பஞ்சாயத்துச் செய்வதிலும் வல்லவர்” என்றே நினைவு கூர்கின்றார்.
பெருந்தலைவர் காமராசர், தந்தை பெரியார், பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி, முன்னாள் அமைச்சர் ஓ.வி.அழகேசன், காட்டுப்பட்டி இராமையா, முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.வெங்கட்ராமன், தமிழக முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், நாவலர் நெடுஞ்செழியன், முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, சிலம்புச்செல்வர் ம.பொ.சி. ஆகியோரிடமும், தோழர்கள் எம்.கல்யாணசுந்தரம், தோழர் நல்லக்கண்ணு, தா.பாண்டியன் இன்னபிற தலைவர்களிடமும் நெருக்கமான நட்புப்பாலம் கொண்டவர்.
பவளவிழா கண்ட பண்பாளர் :-
மக்கள் தொண்டர் எம்.மாசிலாமணி அவர்களுக்கு 23.10.1994இல் மிகப்பெரிய பவளவிழா தஞ்சை, புதுகை மக்களால் சிறப்பாக விழா நடத்தப்பட்டது. அனைத்துக் கட்சியினரும் இணைந்து தமிழக அமைச்சர்கள் மூவர் கலந்து கொண்டும் விழாவிற்குச் சிறப்புச் செய்துள்ளனர். மக்களிடம் திரட்டிய பொற்கிழிப் பதக்கத்திற்கான ரூபாய் ஒரு இலட்சத்தை அமைச்சர் எஸ்.டி.எஸ் அவர்களால், தோழர் தா.பா.முன்னிலையில் விழா மேடையில் வழங்கி தோழர் எம்.எம். அவர்களைச் சிறப்பித்தனர். இவரது போராட்டத்தையும் போராட்டக் களத்தையும் “தியாகி.எம்.மாசிலாமணி ஓர் ஆய்வு” என்று ஆய்வாளர் க.வசந்தகுமார், பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வியல் நிறைஞர் (எம்.ஃபில்.,) பட்டத்திற்கு ஆய்வு செய்துள்ளார் என்பது பெருமைக்குரிய செய்தியாகும்.
இறுதிப்பயணம் :
பாட்டாளி மக்களின் கூட்டாளியான தோழர் எம்.எம்.அவர்கள் 76 ஆண்டுகள் எடுத்துக்காட்டாக வாழ்ந்து, சிறந்த நேர்மையாளராகவும், ஒழுக்க சீலராகவும், அனைத்து நற்பண்புகளைப் பெற்றவராகவும் திகழ்ந்துள்ளார். உழைக்கும் மக்களின் உரிமைக்காகப் போராடி, சிறைப்பட்டு சித்ரவதைகளை அனுபவித்து மக்களின் மனத்தில் நீங்காத இடம் பெற்றுள்ளார். தோழர் எம்.மாசிலாமணி அவர்கள் 23.10.1998 அன்று தமது இல்லத்தில் இயற்கை எய்தினார். மறுநாள் 24.10.1998இல் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதி புகழஞ்சலியில் அனைத்துக் கட்சித் தலைவர்களும், தஞ்சை, புதுகை, திருச்சி, சிவகங்கை, திருவாரூர் மாவட்ட மக்களும், கடலெனத் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தி இவருக்குப் புகழ் சேர்த்துள்ளனர். தோழர் எம்.எம். என்ற பெயர் இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களின் நினைவில் வந்து போகிறது.