கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாதிப்புக்குள்ளான தென்மாவட்ட மக்களுக்காக அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகையை வழங்க தொடங்கிவிட்டதாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்ததாவது, ‘தென் மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டெழ அறிவித்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கத் தொடங்கிவிட்டோம்.
மழை வெள்ளம் ஏற்பட்டவுடன் மக்களுக்குத் துணையாகக் களத்தில் இருந்த அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியும் நிவாரணத் தொகையை மக்களிடம் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தனர்’ என்று பதிவிட்டுள்ளார்.