திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழக அரசு சார்பில் மதுரை புதுநத்தம் சாலையில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 2.61 ஏக்கர் நிலத்தில், 2,22,815 சதுர அடி பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக ‘கலைஞர் நூற்றாண்டு நூலகம்’ கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகத்தைத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 15 ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில் முதல்வர் இது குறித்து ட்விட்டரில், "சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் சங்கத் தமிழ்க் கவிதைகளுக்குத் தன் தங்கத் தமிழ் வரிகளால் அணி சேர்த்த கலைஞரின் பெயரில் மாபெரும் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ஜூலை 15 அன்று பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளில் திறந்து வைக்கிறேன். கலைஞர் நூற்றாண்டில் இதுவரை அமைக்கப்பட்ட மருத்துவமனை, நூலகம், கோட்டம் ஆகியவையும் இன்னும் அமையவிருப்பவையும் காலம் கடந்து நிற்கும். மக்களுக்கு என்றென்றும் பயன் தரும். கலைஞரின் புகழை உரக்கச் சொல்லும்" எனத் தெரிவித்துள்ளார்.