கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்த சூழலில் கனமழையின் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் உருவாக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்தல். சமுதாய சமையல் அறைகள் அமைத்து இதர பகுதிகளில் இருந்து வரப்பெறும் உணவு பொட்டலங்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. மீட்புப் பணியில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர், மீனவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் மீட்புப் பணியில் ஈடுபட்ட மீனவர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நேசக்கரம் நீட்டி நிவாரணப் பணிகளுக்குத் தங்களை ஒப்படைத்துக் கொண்ட தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, இராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களின் பண்பும், திருச்செந்தூர் விரைவு இரயில் பயணிகளைக் காப்பாற்றிய கிராம மக்களின் அன்பும், ‘THE BEST WAY TO FIND YOURSELF IS TO LOSE YOURSELF IN THE SERVICE OF OTHERS’ என்று தேசத் தந்தை மகாத்மா காந்தி சொன்னதை நினைவுபடுத்துகிறது. அடுத்தவருக்கு உதவுவதில் கரைந்து போனால், வெறுப்புணர்ச்சிகள் தோற்று, மானுடம் தழைக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.