தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. விரிவுபடுத்தும் இந்த திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் படித்த அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், "கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நேற்றும், இன்றும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் சிறந்த முறையில் சமூக தொண்டாற்றி வரும் அரசுத் துறையைச் சேர்ந்த பணியாளர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் நிர்வாகிகளுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம், காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்தை பார்வையிட்டார். அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் உருவச் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கலைஞர் கோட்டத்தை பார்வையிட்ட பின் அப்பகுதியில் உள்ள சிறுவர், சிறுமியர் மற்றும் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். இந்நிகழ்வின் போது நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் ஆகியோர் உடனிருந்தனர்.