சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு நேற்று ரெட் அலர்ட் கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த 14ஆம் தேதி இரவு முதலே சென்னையின் பல பகுதிகளில் கனமழையானது பெய்து வந்தது. இதனால், சென்னையில் உள்ள புறகர் பகுதிகளில் மழை நீர் தேங்கியிருந்தது. இருந்த போதிலும், தமிழக அரசு எடுத்த துரித நடவடிக்கையால், சாலைகளில் இருந்த தண்ணீர் அனைத்தும் உறிஞ்சப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. பெரும்பாலான இடங்களில் மழை நீர் அப்புறப்படுத்தப்பட்டதால், இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
சென்னையில் மழைநீரால் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கடந்த இரண்டு நாட்களாக வடசென்னை, தென் சென்னை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டதையடுத்து, மூன்றாவது நாளாக இன்று குளத்தூர் பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழைக்காலத்தில் பணியில் இருந்த தூய்மை பணியாளர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும், மழைக்கால மருத்துவ முகாம்களையும் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “சென்னை மாநகராட்சியின் பணிகள், சிறப்பாகவும் மக்கள் பாராட்டக்கூடிய அளவுக்கு இருந்திருக்கிறது. அதற்காக மாநகராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சமூக வலைத்தளங்களில் மக்கள் பாராட்டுவதை சிலரால் தாங்கிக் கொள்ளமுடியவில்லை. மக்கள் பாராட்டுவதை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் விமர்சனம் செய்துகொண்டு வருகிறார்கள். அதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எங்களது மக்கள் பணியை தொடர்ந்து செய்து கொண்டு வருவோம். மழை வெள்ளத்தை அரசியலாக்கி வியாபார பொருளாக்க சிலர் முயற்சி செய்கின்றனர். அதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை. வருங்காலங்களில் எந்த மழை வந்தாலும் சமாளிக்க அரசு தயாராக உள்ளது” என்று கூறினார்.