Skip to main content

அண்ணாமலை பல்கலை. 86வது பட்டமளிப்பு விழா: மாணவர்களுக்கு  பட்டங்களை வழங்கிய ஆளுநர்!

Published on 17/10/2024 | Edited on 17/10/2024
Governor awarded degrees to students at 86th graduation ceremony in Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக 86-வது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை(17.10.2024) பல்கலைக்கழக சாஸ்திரி அரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் பல்கலை.வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி பங்கேற்று நேரடியாக 789 மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களையும், இதில் பல்வேறு பாடங்களில் முதன்மையில் தேர்ச்சி பெற்ற 38 மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அறக்கட்டளை சார்பில் தங்கப் பதக்கம், பட்டங்கள், ரொக்கப் பரிசுகளையும்  வழங்கினார்.

மேலும்  ஆராய்ச்சி பட்டமான பிஹெச்டி , எம்ஃபில் 728 பேருக்கும் வழங்கப்பட்டது. 38 பேருக்கு தங்கப் பதக்கம் உள்ளிட்ட பதக்கங்கள் வழங்கப்பட்டது. நேரடி சேர்க்கை மூலம் பயின்ற மாணவர்கள் 789 பேருக்கும், தொலைதூரக்கல்வி மையம் உள்ளிட்ட பட்டம் பெறும் மாணவர்கள் 35593 பட்டங்களை  பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவி தலைமை வகித்து மொத்தமாக 36382 மாணவ, மாணவியர்களுக்கு  பட்டங்களை வழங்கினார்.

முன்னதாக துணைவேந்தர் ராம.கதிரேசன் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சரும், பல்கலை. இணைவேந்தருமான கோவி.செழியன்,  புதுதில்லி இந்திய அரசு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்  தேசிய காச நோய் ஒழிப்பு திட்டம் முதன்மை ஆலோசகர் மற்றும் சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவருமான மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று பட்டமளிப்பு விழா உரையாற்றினார்.

விழாவில் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன், கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் மலையரசன், முன்னாள் எம்எல்ஏ மருதூர் ராமலிங்கம், பதிவாளர் எம்.பிரகாஷ் மற்றும் சிண்டிகேட் உறுப்பினர்கள், கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ம.ராஜசேகர், சிதம்பரம் உதவி ஆட்சியர் ராஷ்மிராணி, பதிவாளர் மு.பிரகாஷ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.எஸ்.குமார், தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் சீனுவாசன், அண்ணாமலைநகர் பேரூராட்சி தலைவர் பழனி நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமரன் , சிதம்பரம் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜேம்ஸ் விஜயராகவன், அப்பு சந்திரசேகர் சிண்டிகேட் உறுப்பினர்கள், புல முதல்வர்கள், மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுசாமி உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் பட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

சார்ந்த செய்திகள்