ஜெய் பீம் பெரு வெற்றிக்கு பிறகு இயக்குநர் ஞானவேல் ரஜினியுடன் கைகோர்த்திருக்கும் திரைப்படம் வேட்டையன். சமூக அக்கறை கொண்ட சோசியல் மெசேஜுடன் நல்ல படங்களை கொடுக்கும் ஞானவேல் ரஜினியுடன் இணைந்து கொண்டு இந்த தடவை தன் ஸ்டைலிலும் அதே சமயம் ரஜினிக்கான கமர்சியல் அம்சங்களையும் ஒருசேர மிக்ஸ் செய்து வேட்டையனை கொடுத்து இருக்கிறார். அது ஏற்றுக்கொள்ளும்படி இருக்கிறதா, இல்லையா? என்பதை பார்ப்போம்...
கன்னியாகுமரி மாவட்டத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக இருக்கும் போலீஸ் அதிகாரியான ரஜினிகாந்த் தனக்கு கொடுத்த கேஸுகளை மிக கனகச்சிதமாக என்கவுன்டர்கள் மூலம் தீர்த்து வைக்கிறார். அவர் எடுக்கும் கேஸ்-களில் இதுவரை தோல்விகளையே சந்திக்காமல் குற்றவாளிகள் அனைவரையும் என்கவுன்டர்களால் சுட்டு தள்ளி வருகிறார். அந்த ஊரில் ஒரு கஞ்சா கேஸை ஸ்கூல் டீச்சராக இருக்கும் துஷாரா விஜயன் மூலம் ரஜினிகாந்துக்கு தெரிய வர அவருடைய உதவி மூலம் கஞ்சா கடத்தும் போதை கடத்தல் மன்னனை என்கவுன்டர் செய்கிறார். இதனால் இவர்களுக்கு பெரும் பாராட்டு கிடைக்கிறது. துஷாரா விஜயனும் தன் ஆசை படி சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கி செல்கிறார். போன இடத்தில் அங்கும் நீதி, நியாயம், நேர்மை என பேசும் துஷாரா விஜயன் மர்மமான முறையில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார். இந்த கொலையை துப்பு துலக்க என்கவுன்டர் அதிகாரியான ரஜினிகாந்த் சென்னைக்கு விரைகிறார். வந்த இடத்தில் துஷாரா விஜயனை கொலை செய்தது யார் என ரஜினிகாந்த் துப்பு தொலைக்கினாரா, இல்லையா? கொலைக்கான காரணம் என்ன? குற்றவாளியை தண்டித்தாரா, இல்லையா? என்பதே வேட்டையன் படத்தின் மீதி கதை.
என்கவுன்டர் என்பது மக்கள் பார்வையில் ஒரு புறம் இருக்க போலீஸ் பார்வையில் அதை எப்படி கையாள்கிறார்கள்? அதற்குள் இருக்கும் நீதி நியாயம் என்ன. அதேசமயம் பாதகம் சாதகமும் என்ன என்பதை மிக விரிவாக காட்டி இருக்கிறார் இயக்குநர் ஞானவேல். ஒரு உயர் போலீஸ் அதிகாரி பாரபட்சம் பார்க்காமல் என்கவுன்டர் செய்பவர், எப்படி மனம் மாறி என்கவுண்டர் என்பது சமூகத்திற்கு அவசியமா இல்லையா... அதை உணர்ந்து புத்திசாலித்தனமாக அவர் எப்படி செயல்படுகிறார் என்பதை தன் ஸ்டையிலேயே சமூகத்துக்கு அவசியமான ஒரு படமாகவும் அதேசமயம் ரஜினி ஸ்டைலில் மாஸ் கமர்சியல் கிளாஸ் படமாகவும் ஒருசேர கலவையாக இப்படத்தை கொடுத்து குடும்பத்துடன் சென்று ரசிக்கும்படியாக இந்த வேட்டையனை கொடுத்து இருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் பாதி ஸ்டேஜிங்கில் அதிக நேரம் எடுத்துக் கொண்டாலும் அவை ரசிக்கும்படி அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்துவது முதல் ஆரம்பித்து அவர்களின் செயல்பாடுகள் என்ன அவர்களின் நோக்கம் என்ன என்பது போன்ற விஷயங்கள் முதல் பாதி முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாலும் இரண்டாம் பாதியில்தான் கதை ஆரம்பிக்கிறது. பிறகு படம் வேகம் எடுக்க ஆரம்பித்து கதைக்குள் பயணித்து போக போக ஆங்காங்கே சில அயர்ச்சியுடன் கூடிய காட்சிகளும் கடந்து இறுதியில் ஒரு ப்ராமிசிங்கான கமர்சியல் படமாக இப்படம் நிறைவு பெறுகிறது.
முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் ஆங்காங்கே சற்றே மிஸ்ஸிங். இருந்தாலும் அவை சிறிய குறைகளாகவே தெரிவது படத்திற்கு பெரிய பிளஸ். முதல் பாதியில் பெரிதாக கதை இல்லை என்றாலும் படம் விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாம் பாதியில் கதைக்குள் பயணிக்கும் படம் விறுவிறுப்பாகவும் அழுத்தமாகவும் சொசைட்டிக்கு தேவையான கருத்தையும் ஒரு சேர கூறி என்கவுன்டர் என்பது இச்சமூகத்திற்கு அவசியமா என்ற கேள்விக்கு விடையாக அமைந்திருக்கிறது. எத்தனை போலீஸ் படங்கள் நடித்திருந்தாலும் ஒவ்வொரு போலீஸ் படத்திற்கும் ஒவ்வொரு மேனரிசத்தை மிக கண கட்சிதமாக கொடுத்து ரசிக்க வைக்கும் ரஜினி, இதிலும் அதை தவறவிடவில்லை. தன்னுடைய ஸ்கிரீன் ப்ரெசென்ஸ் எந்த அளவு முக்கியம் என்பதை உணர்ந்து, ஒரு நடிகராகவும் அதே சமயம் காட்சிகளுக்கும் கதைக்கும் என்ன தேவையோ அதையும் அதனுள் உட்புகுத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமான ஒரு நடிகராக இன்னுமும் வலம் வந்து கொண்டிருக்கிறார். அதற்கு இந்தப் படமும் சான்றாக அமைந்திருக்கிறது.
படத்தின் இன்னொரு நாயகனாக வரும் அமிதாப் பச்சன் ரஜினியுடன் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருக்கிறார். சின்ன சின்ன முக பாவனைகள் வசன உச்சரிப்புகள் மூலம் சிறப்பான நடிப்பை மிக எதார்த்தமாக அப்படியே நம்முள் கடத்தி விடுகிறார். இவரின் அழுத்தமான கதாபாத்திரம் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. ரஜினியின் அசிஸ்டன்டாக வரும் திருடன் பகத் பாஸில் வழக்கம் போல் வில்லத்தனம் காட்டி மிரட்டாமல் இப்படத்தில் சற்றே காமெடி செய்து பார்ப்பவர்களுக்கு ஆசுவாசத்தை கொடுத்து இருக்கிறார். இவரது கதாபாத்திரம் படத்தின் திரைக்கதைக்கு நன்றாக உதவி இருக்கிறது. இறுதிக்கட்ட காட்சிகளில் சற்றே கலங்கடிக்க செய்து விடுகிறார். டீச்சராக வரும் துஷாரா விஜயன் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். பார்ப்பவர்களை கண்கலங்க வைக்கிறார். பார்ப்பதற்கும் அழகாக இருக்கிறார் நடிப்பதற்கும் சரியாக பொருந்துகிறார். மொத்தத்தில் தனக்கு கொடுத்த வேலையை மிக அழகாக செய்து இருக்கிறார்.
போலீஸ் அதிகாரியாக வரும் ரித்திகா சிங் கம்பீரமாக இருக்கிறார். மெடுக்கான நடை உடை பாவனை நடிப்பு என தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார். நாயகி மஞ்சு வாரியர் வழக்கமான நாயகி போல் படத்தில் அதிகமான வேலை இல்லை. ஆனால் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து சிறிது நேரமே தன் பங்களிப்பு இருந்தாலும் அதை நேர்த்தியாகவும் நிறைவாகவும் செய்திருக்கிறார். சின்ன கதாபாத்திரத்தில் வந்தாலும் மனதில் பதிகிறார் அபிராமி. வில்லனாக வரும் ராணா இறுதி கட்ட காட்சிகளில் மட்டும் வந்து சென்று இருக்கிறார். வழக்கமான கார்ப்பரேட் வில்லனாக வரும் அவர் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்று இருக்கிறார். எட்டப்பனாக நடித்திருக்கும் கிஷோர் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து திருப்புமுனை தரும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மற்றபடி உடன் நடித்த மற்ற முன்னணி முக்கிய கதாபாத்திரங்கள் அனைவரும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர்.
எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் கமர்சியல் காட்சிகள் மட்டும் அல்லாமல் அழுத்தமான காட்சிகளும் மிகச் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு ரசிக்க வைக்கும்படி இருக்கிறது. குறிப்பாக ஆக்சன் காட்சிகளுக்கு எந்த அளவு கமர்சியல் அம்சங்கள் தேவையோ அதை சிறப்பாக கொடுத்து அதேசமயம் சமூகம் கதைக்கு சம்பந்தப்பட்ட காட்சிகள் அதற்கு ஏற்றார் போல் மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அனிருத் இசையில் மனுசிலாயோ பாடல் துள்ளல் ரகம். வழக்கம்போல் தனது அதிரடியான பின்னணி இசை மூலம் படத்தை வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்று இருக்கிறார். ஜெயிலர் அளவுக்கு இந்த படத்தில் அவருக்கு அதிக வேலை இல்லை என்றாலும் இந்த படத்திற்கு என்ன தேவையோ அந்த அளவுக்கான இசையை சிறப்பாக கொடுத்து ரசிக்கும்படி படத்தை மாற்றி இருக்கிறார். சின்ன சின்ன பிளாட்டான காட்சிகளைக் கூட தன் இசையால் மெருகேற்றி படத்தை வேறு ஒரு விதத்தில் ரசிகர்களுக்கு சென்றும்படி கொடுத்திருக்கிறார்.
கதைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த கதாபாத்திரமாகவே மாற முடியுமோ அதையும் சிறப்பாக செய்த ரஜினிகாந்த் தன் ரசிகர்களுக்காக ஆங்காங்கே சில கமர்சியல் விஷயங்களையும் வைத்து அதன் மூலம் அனைத்து விதமான ரசிகர்களையும் சேட்டிஸ்ஃபை செய்யும்படியான ஒரு திரைப்படத்தை ஞானவேல் உடன் கைகோர்த்து சிறப்பாக கொடுத்து இருக்கிறார். படத்தில் சில பல குறைகள் மற்றும் வேகத்தடைகள் ஆங்காங்கே தென்பட்டாலும் அவை படத்தை பெரிதாக பாதிக்கும்படியாக இல்லாதது படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து இருக்கிறது.
வேட்டையன் - விவேகமானவன்!