Skip to main content

மூன்று மாதம் அம்மா வீட்டிலிருந்த மனைவி; கர்ப்பமானதாக சந்தேகப்பட்ட கஞ்சத்தன கணவர் - வழக்கறிஞர் சாந்தகுமாரியின் வழக்கு எண்:94

Published on 17/10/2024 | Edited on 17/10/2024
 advocate-santhakumaris-valakku-en-94 

குடும்ப நல வழக்குகள் பலவற்றை கையாண்டது குறித்த அனுபவங்களை ‘வழக்கு எண்’ என்ற தொடரின் வழியே தொடர்ச்சியாக வழக்கறிஞர் சாந்தகுமாரி பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் ஒரு வழக்கைப் பற்றி இன்று பார்ப்போம்.

புனிதா என்ற பெண்ணுடைய வழக்கு இது. சென்னை மாம்பலத்தைச் சேர்ந்த இந்த பெண்ணுக்கும் விருத்தாசலத்தைச் சேர்ந்த ஒரு பையனுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு விருத்தாசலத்திலுள்ள ஒரு கோயிலில் திருமணமாகியிருக்கிறது. திருமணத்திற்கு புனிதாவின் பெற்றோர் 15 பவுன் நகை மற்றும் மாப்பிள்ளைக்கு 2 பவுன் செயின் போட்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமான அடுத்த நாளே புனிதாவின் கணவர், காலம் முழுக்க தன் மனைவி தன்னோடு இருக்கப்போவதால் ஒரு வருடத்திற்கு தன் மாமியார் வீட்டில் இருந்தபடியே எந்த காரியத்தையும் செய்ய வேண்டும் என புனிதாவிடம் சொல்லியிருக்கிறார். இதை புனிதா தன் அம்மாவிடம் கூற, இருவருக்கும் ராயப்பேட்டை அருகில் ஒரு வீடு பார்த்து குடித்தனம் இருக்க ஏற்பாடு செய்து கொடுத்து தொடர்ந்து செலவு செய்துள்ளனர்.

சில நாட்கள் சென்ற பிறகு புனிதா என்ன கேட்டாலும் தன் மாமியாரிடம் கணவர் கேட்கச் சொல்லியிருக்கிறார். புனிதாவும் இதை தன் அம்மாவிடம் கூற, பெற்றோரும் அதைச் செய்துள்ளனர். இப்படித் தொடர்ந்து கணவரிடம் புனிதா எது கேட்டாலும் தன் அம்மாவிடமே சென்று நிற்கும் நிலை புனிதாவிற்கு ஏற்படுகிறது. ஒரு நாள் புனிதா தன் கணவரிடம் ஜாக்கெட் கேட்டபோது அதற்கு அவர்,  உன் அம்மாவிடம் கேள் என்று கூறியிருக்கிறார். வேறு வழியின்றி தன் அம்மாவிடம் புனிதா கேட்க, அதற்கு அவர், உன் புருஷன் இதைக்கூட வாங்கி தர மாட்டாரா? எல்லா செலவும் செய்துதானே கல்யாணம் பண்ணிக்கொடுத்தோம் என்று சொல்லியிருக்கின்றனர். இதையடுத்து புனிதாவிடம் அவரது கணவர், உன் அம்மா வீட்டில் ஒரு பகுதி காலியாக இருக்கிறது அங்கு  சென்று நாம் இருப்போம் என்று கூறியிருகின்றார். 

இதைப் புனிதா தன் அம்மாவிடம் கூற, சரி வந்து இங்கு தங்கிக்கொள்ளுங்கள் என்று அவளது அம்மா கூறியிருக்கிறார். இதற்கிடையில் எஞ்ஜினியரான தனக்கு 2 பவுன் நகை மட்டுதானா? என்று புனிதாவை அவளது கணவர் அடித்திருக்கின்றார். இதற்கு புனிதா, தனக்கு அப்பா இல்லை என்றும் அம்மா மட்டும்தான் எஞ்சியிருக்கும் வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டு என் அக்காவுக்குத் திருமணம் முடித்துக்கொடுத்து என்னையும் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள் அவ்வளவுதான் எங்களால் முடிந்து என்று புனிதா கதறியிருக்கிறாள்.

இந்த சம்பவம் நடந்த பிறகு அடிதாங்க முடியாமல் புனிதா தன் அம்மா வீட்டிற்குச் சென்று நடந்ததைக் கூறியிருக்கிறாள். பின்பு புனிதாவின் அம்மா மாப்பிள்ளை வீட்டுக்கு கால் செய்து, என் மகளை அவளது கணவர் அடித்துவிட்டார் என்று தெரிவிக்க, மாப்பிள்ளை வீட்டார் இதை புனிதாவின் கணவரிடம் விசாரித்திருக்கின்றனர். இதையடுத்து தன் மாமியாரிடம் புனிதாவை அழைத்து செல்வதாக மாப்பிள்ளை கூறியிருக்கிறார். ஆனால் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக புனிதாவை அழைத்துச் செல்லாமலே இருந்திருக்கிறார். அதன் பிறகு புனிதாவின் அம்மா மீண்டும் மாப்பிள்ளை வீட்டுக்கு கால் செய்து, என் மகளை கல்யாணம் பண்ணினது மாப்பிள்ளைதான் அதனால் புனிதாவை அழைத்து செல்லச் சொல்லுங்கள் இல்லையென்றால் கல்யாணம் செய்த கோயில் பஞ்சாயத்துக்கு ஏற்பாடு செய்து ஒரு முடிவு பண்ணுங்கள் என்று கூற, ஒரு வழியாக பஞ்சாயத்து முடிந்து மீண்டும் புனிதாவும் அவளது கணவரும் ஒன்றாக இருந்திருக்கின்றனர்.

இருவரும் ஒன்றாக ராயப்பேட்டையில் இருக்கும்போது புனிதா ஒரு நாள் வாந்தி எடுத்திருக்கிறாள். இதற்கு அவளது கணவர், இரண்டு மாதங்கள் புனிதா அம்மா வீட்டில் இருந்ததாகவும் தங்களுக்குள் எதுவும் நடக்காமல் எப்படி வாந்தி வந்தது என்று சந்தேகத்துடன் புனிதாவை மிரட்டியிருக்கின்றார். உடனே இந்த விஷயம் புனிதாவின் அம்மாவிற்குத் தெரிய, புனிதாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பார்க்கையில் சரிவர உணவு சாப்பிடாததால் வயிற்றுக் கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது. பின்பு புனிதாவை தன்னுடனே வைத்துக்கொண்டு அவளது அம்மா மருத்துவச் செலவு செய்திருக்கிறார். உடல்நிலை தேறிய பின்பும் புனிதாவின் கணவர் அவளை அழைத்துச் செல்ல வராமல் இருந்திருக்கிறார். 

இதையடுத்து மாப்பிள்ளை வீட்டுக்கு புனிதாவின் அம்மா கால் செய்து கேட்டபோது, முன்பே புனிதாவை அழைத்துச் செல்வதாகக் கூறினாரே? இன்னும் அழைத்துச் செல்லவில்லையா? என்று கூறியிருக்கின்றனர். ராயப்பேட்டை சென்று விசாரித்ததில் தனது உடைமைகளை மட்டும் எடுத்து வேலை பார்க்கும் இடத்தில் மாப்பிள்ளை தங்கியிருக்கிறார். இதையடுத்து மாப்பிள்ளை வீட்டுக்கும் புனிதா வீட்டிற்கும் பெரிய பஞ்சாயத்து நடக்க அதில் புனிதாவின் அம்மா கோபமாக மாப்பிள்ளைதானே கல்யாணம் பண்ணிக்கொண்டார் அவர்தான் புனிதாவை பார்த்துக்கொள்ள வேண்டும். இனிமேல் நான் புனிதாவை பார்த்துக்கொள்ள முடியாது என்று சொல்லியிருக்கின்றார். கணவரிடமும் சரியாக வாழ முடியாமல் சொந்த வீட்டிலும் வாழ முடியாமல் புனிதா தவிப்பதைப் பார்த்த அவளது அம்மா, மனம் உருகி மீண்டும் தன்னிடம் புனிதாவை சேர்த்துக்கொள்கிறார். 

இந்த சூழலில் புனிதாவும் அவளது அம்மாவும் என்னை சந்தித்து நடந்ததை கூறினர். உன் கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமா? என்று புனிதாவிடம் கேட்டபோது, அதற்கு அவள் தன்னை மனைவியைப்போல ஒருநாளும் அவர் நடத்தவில்லை அதனால் எனக்கு அவருடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று கூறினாள். மேலும் எந்த பொருள் கேட்டாலும் கஞ்சத்தனமாக நடந்துகொள்கிறார் என்று கூறினாள். விவாகரத்து வழக்கு தொடரலாமா என்று புனிதாவின் அம்மாவிடம் கேட்டபோது, கணவர் இல்லாமல் புனிதாவின் அக்காவையும் அவளையும் திருமணம் செய்துகொடுத்திருக்கிறேன். 15 பவுன் நகை போட்டு புனிதாவை திருமணம் செய்து வைத்தது அவள் தனியாக வாழ்வதற்கா? என்று புலம்பினார். அதன் பிறகு நான் மெயிண்டைனன்ஸ் வழக்கு போட்டேன். நீதிபதி புனிதாவின் கணவரைத் திட்டி அவருக்கு வரும் ரூ.30,000 சம்பளத்தொகையிலிருந்து புனிதாவிற்கு ரூ.15,000 பணத்தைக் கொடுக்கச் சொல்லி உத்தரவிட்டார். இதற்கு புனிதாவின் கணவர் பி.எஃப் பிடித்ததுபோக வருமானம் குறைவாகத்தான் வரும் என்று கூறியிருக்கிறார். அதையெல்லாம் நீதிபதி விசாரித்து பிறகு மாதம் மாதம் கொடுக்க வேண்டாம் பி.எஃப். தொகையை வாங்கி மொத்தமாக ஒரு தொகையை புனிதாவிடம் கொடுத்துவிடுங்கள் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து அவரிடமிருந்து திருமணத்திற்குப் போட்ட நகைகள் மற்றும் ரூ.5 லட்சம் பணத்தை புனிதாவிற்கு வாங்கிக்கொடுத்தேன். பிறகு புனிதாவை அழைத்து அம்மாவுக்குத் தொல்லை கொடுக்காமல் எதாவது வேலைக்குச்  செல் என்றேன். அதேபோல் புனிதாவின் அம்மாவிடம் விரைவில் புனிதாவிற்கு விவாகரத்திற்கு ஏற்பாடு செய்து நல்ல மாப்பிள்ளையைப் பார்த்து திருமணம் செய்து கொடுங்கள் என்று ஆலோசனை சொல்லி அனுப்பி வைத்தேன்.