கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியை சோ்ந்த மரியசுரேஷ் கடந்த 9- ஆம் தேதி தக்கலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது மாமியாரை பார்ப்பதற்கு வந்துள்ளார். அப்போது மருத்துவமனையைச் சோ்ந்த காவலாளிகள் இரண்டு பேர் நோயாளிகளை பார்க்கும் நேரம் முடிந்து விட்டது என கூறி அவரை மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்துள்ளனர்.
அதற்கு மரியசுரேஷ் நான் கூலி தொழிலாளி காலையில் வந்து மாமியாரை பார்க்க நேரம் கிடைக்காது. அதனால் தான் வேலை முடிந்து மதியம் வந்து இருக்கிறேன் என கூறியதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு கைகலப்பாக மாறி காவலாளிகள் இரண்டு பேரும் மரியசுரேஷை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த மரியசுரேஷ் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (13/02/2020) மரியசுரேஷ் உயிரிழந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த அவரின் உறவினர்கள் கிறிஸ்தவ பாதிரியர் ஜார்ஜ் பென்னையா தலைமையில் மரியசுரேஷ் தாக்கப்பட்ட தக்கலை அரசு மருத்துவமனையில் குவிந்து காவலாளிகள் இரண்டு பேரையும் கைது செய்ய கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் அவர்கள் திடீரென்று தேசிய நெடுஞ்சாலையில் தக்கலை காவல்நிலையம் முன்பு குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், முன்னாள் எம்.எல்.ஏ லீமாரோஸ் ஆகியோருடன் மறியலில் ஈடுபட்டனர். கொலையாளிகள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவில்லை என்றால் உடலை வாங்க மாட்டோம் என்றனர்.