
தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சரும், திமுக கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளருமான சி.வெ. கணேசனின் மனைவி பவானி அம்மாள் (54), கடந்த 09ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதையடுத்து, விருத்தாசலத்தில் உள்ள அமைச்சர் சி.வெ. கணேசன் இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது துணைவியாரின் உடலுக்கு திமுக பொதுச்செயலாளரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன், சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி, நக்கீரன் ஆசிரியர், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், அமைச்சர்கள் சிவசங்கர், கயல்விழி, அன்பில் மகேஷ், மக்களவை உறுப்பினர் ஆ. ராசா மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து பவானி அம்மாளின் இறுதி ஊர்வலம் கடந்த 10.12.2021 அன்று காலை விருத்தாசலத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, அமைச்சர் கணேசனின் சொந்த ஊரான கழுதூரிலுள்ள வெங்கடேஸ்வரா கல்லூரியில் மதியம் அடக்கம் செய்யப்பட்டது. இதனிடையே, பவானி அம்மாள் இறப்புக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் இரங்கல் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் 11.12.2021 அன்று மாலை விருதாச்சலத்தில் உள்ள அமைச்சர் சி.வெ. கணேசன் வீட்டிற்கு வந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் கணேசன் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பவானி அம்மாளின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ. வேலு, மெய்யநாதன், சாமிநாதன், எம்.எல்.ஏ.க்கள் ஐயப்பன், சபா.ராஜேந்திரன் உள்ளிட்டோரும் பவானி அம்மாள் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.