தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு கடந்த மாதம் 27 ஆம் தேதி (27.01.2024) அரசு முறை பயணம் மேற்கொண்டார். ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தினார். இதனையடுத்து பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை புறப்பட்டார். இன்று காலை 08.00 மணிக்கு சென்னை வந்தடையும் முதலமைச்சருக்கு விமான நிலையத்தில் திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் தமிழகத்திற்கு வருகிறேன். ஸ்பெயினுக்கான இந்திய தூதரகத்தின் ஒருங்கிணைப்புக்காக எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்பெயினில் உள்ள தமிழ் மக்கள் காட்டிய அன்பும், விருந்தோம்பலும் என்றும் நெஞ்சங்களில் நிறைந்திருக்கும். ஸ்பெயினில் உள்ள தமிழ் மக்களின் நினைவுகள் பொக்கிஷமாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.