







தொழிலாளர் தினம் இன்று (01/05/2022) உலகம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் மே தின பூங்காவில் உள்ள மே தினத் தூணில் மரியாதைச் செலுத்தினார். அப்போது, முதலமைச்சரை வரவேற்பதற்காக தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் சார்பில் சாலையில் இருபுறமும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சிவப்பு நிற ஆடை அணிந்தப்படி, நின்று வரவேற்பு பலகைகளை கையில் வைத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிவப்பு நிற சட்டை அணிந்து கலந்துக் கொண்டார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அண்ணா, கலைஞர் ஆகியோரைத் தொடர்ந்து, ஏழைகள், தொழிலாளர்கள் மற்றும் தோழர்கள் மனமகிழ்ச்சியோடு சிரிக்கக் கூடிய அரசாக தான் இந்த அரசு இருப்பதாக, தெரிவித்தார். மேலும், தொழிலாளர்களின் நலன் காப்பதோடு, அவர்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் அரசாகவும் இருக்கும் எனவும் முதலமைச்சர் உறுதியளித்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "உலக உழைப்பாளர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த மே தின வாழ்த்துகள்! ஆட்சிக்கு வந்த ஒரே ஆண்டில் தொழிலாளர் நலன் காக்கும் எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்துள்ளோம். தொழிலாளர்களுக்கு வாழ்த்துச் சொல்வதோடு, அவர்களை வாழவைக்கும் அரசாகவும் கழக அரசு என்றுமே விளங்கும்!" என்று குறிப்பிட்டுள்ளார்.