திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள தொப்பம்பட்டியில் மாநில விரிவாக்கத் திட்டத்திற்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் உழவர் விழா நடைபெற்றது. இந்த விழாவில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகளான உரம் மற்றும் தென்னை கன்றுகளை வழங்கினார்.
விழாவில் பேசிய உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, "தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். விவசாயிகளுக்காக வேளாண்மைத்துறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் விவசாயிகள் நலன் கருதி பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அதன்படி, உழவர் விழா நடத்தப்படுகிறது. தொப்பம்பட்டி வட்டாரத்தில் 2021-2022 ஆம் ஆண்டு 'அட்மா' திட்டத்தின் கீழ் வறட்சியான பகுதியில் நீர் ஆதாரத்தைப் பெருக்கி விவசாய பரப்பு அதிகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
மழை காலங்களில் உபரிநீர் வீணாகி கடலில் கலப்பதைத் தடுத்து சேமிக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. இதற்காக 1,650 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் மு.க.ஸ்டாலின் விவசாயிகள் நலனுக்காக முருங்கை அதிக அளவில் சாகுபடி நடைபெறும். ஏழு மாவட்டங்களை ஒருங்கிணைந்து ஏற்றுமதி மண்டலமாக அறிவித்துள்ளார். மேலும் நெல்லுக்கு ஆதார விலை கரும்புக்கு ஊக்கத் தொகை ஆகியவற்றையும் அறிவித்துள்ளார்." இவ்வாறு அமைச்சர் கூறினார்.