உங்க கட்சியில முதல்வர் வேட்பாளர் யார்? என அமைச்சர்களிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “இதுல சந்தேகமென்ன அண்ணன் எடப்பாடியார் தான்..." எனவும், ஒரு சிலர் "இப்பவெல்லாம் சொல்ல முடியாது தேர்தல் முடிந்த பிறகுதான்.." என்றும், இன்னும் சில அமைச்சர்களோ, வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூடி முதல்வரை தேர்ந்தெடுப்போம் எனச் சென்ற மாதம் அ.தி.மு.க. தரப்பில் விவாதம் சூடாக நடக்க ஒரு கட்டத்தில் யாரும் எதுவும் பேசக் கூடாது என ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். தரப்பிலிருந்து கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஒரு அமைச்சர் எதற்கும் அசராமல் மீண்டும் முதல்வர் இவர்தான் எனக் கூறி சர்ச்சை புகையைக் கிளப்பியுள்ளார். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பகுதியில் அரசின் சார்பாக நலத்திட்டப் பணிகளை சுற்றுச் சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தொடங்கிவைத்தார். அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசும்போது, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம், கவுந்தபாடியில் உள்ள 5,690 வீடுகளுக்கு ரூ.4.33 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள், சிறு பாலங்கள் கட்டுதல் உட்பட பத்துக்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் சாலை மேம்பாட்டுப் பணிகள், என ரூ.10.28 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டது.
இப்போது சென்னை கோயம்பேடு தவிர்த்து அனைத்து இடங்களிலும் காற்று மாசுபாடு குறைந்தளவே உள்ளது. பொதுப்போக்குவரத்து தற்போது தான் துவங்கப்பட்டுள்ளதால் காற்றின் மாசு இனிமேல்தான் ஆய்வு செய்யப்படும். கரோனா பரிசோனை என்பது அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் செய்யப்பட்டு வருகிறது. தேர்தலை எதிர்கொள்ள நாங்க எப்போதும் தயாராக இருக்கிறோம். அடுத்த ஆண்டுதான் தேர்தல் என்றாலும்கூட இப்போதே தேர்தல் வந்தாலும் நாங்கள் முழுவெற்றி பெறுவோம். அண்ணன் எடப்பாடியார்தான் மீண்டும் முதல்வராக தமிழகத்தை வழிநடத்தப் போகிறார்." என அமைச்சர் கருப்பனன் பேசினார்.