திடீர் நகர் மற்றும் கோதாமேடு பகுதி அளவிலான கூட்டமைப்பு இணைந்து நடத்திய மகளிர் தின விழா கொண்டாட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இதில் தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு பேசுகையில், ''இந்தியாவில் இருக்கின்ற 36 மாநிலங்களில் மகளிருக்கு அதிகமான சலுகைகளை தந்து கொண்டிருக்கின்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அண்மையில் சட்டமன்றத்தில் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று ஒரு திட்டத்தை அறிவித்தார்கள். அந்தத் திட்டத்தை முதலில் தொடங்குவதற்கு முன்னால் தேர்தல் அறிக்கையை தயாரித்து தந்தவர்கள் என்ன எழுதி தந்தார்கள் என்றால், மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கு தருகின்ற அந்தத் தொகை உதவித்தொகை என்று எழுதி தந்தார்கள்.
அதன் பிறகு முதலமைச்சர் அந்த தேர்தல் அறிக்கையை வாங்கி திருத்தி அது உதவித்தொகை அல்ல உரிமைத் தொகை என்றார். நம்முடைய சகோதரிகளுக்கு, நம் வீட்டுப் பெண்களுக்கு அரசு தருவது உதவித்தொகை அல்ல உரிமைத்தொகை என்றார். இந்த பட்ஜெட்டில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வருகின்ற செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளில் அந்தத் திட்டத்தை சென்னையில் நானே தொடங்குவேன் என முதல்வர் அறிவித்திருக்கிறார். இதை அறிவித்த உடனே ஒரு சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால் 7,000 கோடி அறிவித்துள்ளீர்கள் இரண்டு கோடியே 10 லட்சம் ரேஷன் கார்டு இருக்கு. இவ்வளவு பேருக்கும் எப்படி கொடுப்பீர்கள் என்று கேட்கிறார்கள்.
நிதித்துறை அமைச்சர் மிக தெளிவாக சொல்கிறார் உரியவர்களுக்கு இது கொடுக்கப்படும். இதற்கு உரியவர்கள் யார் என்றால் இந்த அரங்கில் இருப்பவர்கள் தான் உரியவர்கள்; திடீர் நகரில் இருக்கக்கூடிய அத்தனை பேருமே உரியவர்கள்; கோதா மேட்டில் இருக்கின்ற 100 சதவீதம் பேரும் உரியவர்கள் தான்; வாழத் தோப்பில் இருக்கின்ற நூறு சதவீதம் பேரும் உரியவர்கள் தான்; அப்பாவு நகர் குடிசை மாற்று வாரியத்தில் இருக்கக்கூடிய 100 சதவீதம் பேரும் உரியவர்கள் தான்; கொத்தவால் சாவடி குடிசை மாற்று வாரியத்தில் இருக்கும் 100 சதவீதம் பேரும் உரியவர்கள் தான். ரங்கராஜபுரத்தில் இருப்பவர்களுக்கா தர வேண்டும்; பெசன்ட் நகரில் இருப்பவர்களுக்கா தர வேண்டும்; எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கே கொடுக்க வேண்டும். அவர்கள்தான் உரியவர்கள்.
உரியவர்கள் அனைவருக்குமே இந்த உரிமைத் தொகை தரப்படும். பெரிய காரில் பவனி வருபவர்களுக்கு தர வேண்டும் அல்லது இன்கம் டேக்ஸ்-ல் லட்சக்கணக்கில் வரி கட்டுபவர்களுக்கு தர வேண்டும் என்பதற்காக இந்த திட்டத்தை தமிழக முதல்வர் அறிவிக்கவில்லை'' என்றார்.