மாலத்தீவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, மத்திய அரசுக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுமார் 29 ஆயிரம் இந்தியர்கள் தொழில் நிமித்தமாகப் புலம் பெயர்ந்து மாலத்தீவில் வசித்து வருகின்றனர். கரோனா பாதிப்பு காரணமாக அவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படாததால், அங்குள்ள இந்தியர்களைப் பத்திரமாக அழைத்து வரவும், நோய்த் தாக்கத்தில் இருந்து காக்கவும் சிறப்பு அதிகாரியை நியமித்து நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, கன்னியாகுமரியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹூபர்ட்சன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், மாலத்தீவில் உள்ள இந்தியர்களைத் தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவர வேண்டும் எனவும், அவர்களுக்குத் தேவையான நிவாரணம் மற்றும் கரோனா நோய்த் தடுப்பு மருத்துவ உதவிகளைச் செய்ய வேண்டும் எனக் கன்னியாகுமரி எம்.பி. எச்.வசந்தகுமார், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே மாலத்தீவில் வசிக்கும் இந்தியர்களுக்குத் தேவையான மருத்துவம், உணவு உள்ளிட்ட உதவிகளைச் செய்ய சிறப்பு அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கிருப்பவர்கள் தாயகம் திரும்ப உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப்பதிவு செய்த நீதிபதிகள், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் மே 12- ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.