சேலத்தில் காதலியை திருமணம் செய்த காதலன், ஒரு வாரத்தில் காதல் மனைவியை துன்புறுத்தி ஜாதியை பற்றி பேசி மனைவியை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அழகாபுரம் மோளப்பட்டியான்வட்டம் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் சுரேஷ்குமார்(25). வீடு மற்றும் கடைகளுக்கு டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சூரமங்கலம் சின்னப்பாநகரை சேர்ந்தவர் சோபியா(24). இவர் பி.காம் வரை படித்த பட்டதாரிப் பெண். இந்த நிலையில் சுரேஷ்குமாரும், சோபியாவும் சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இதனால் சுரேஷ்குமார் வீட்டில் காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். சுரேஷ்குமார் வீட்டில் எதிர்ப்பு அதிகமாக இருந்ததால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 12ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
பின்பு இருவரும் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில் சோபியா, நேற்று முன்தினம் திடீரென சேலம் சூரமங்கலம் மகளிர் போலீஸ் ஸ்டேசனில் கணவர் மீது புகார் கொடுத்தார். அந்த புகாரில் எங்கள் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் சுரேஷ்குமாரும், நானும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். பிறகு தனியாக வீடு வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தோம், இந்த நிலையில் திடீரென எனது கணவரான சுரேஷ்குமார், என் ஜாதி பெயரை சொல்லி என்னை அசிங்கப்படுத்தி வீட்டைவிட்டு வெளியே துரத்திவிட்டார். எனவே, சுரேஷ்குமார் அவரது பெற்றோர் ஏழுமலை, மகாலட்சுமி மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என கூறியிருந்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு சுரேஷ்குமார் உள்பட அவரது குடும்பத்தினர் 4 பேர் மீது மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த புகாரைத் தொடர்ந்து சுரேஷ்குமாரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருமணமான ஒரே வாரத்தில் காதல் கணவன் ஜாதியை சொல்லி கொடுமைப் படுத்தியதால் மனமுடைந்த சோபியா, கணவர் மீது புகார் கொடுத்து சிறைக்கு அனுப்பியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.