Skip to main content

திருத்துறைப்பூண்டியில் 13 குளங்களில் 24 ஆக்கிரமிப்புகள்! -தாசில்தார் தாக்கல் செய்த ஆய்வறிக்கை!

Published on 14/01/2020 | Edited on 14/01/2020

திருத்துறைப்பூண்டியில் உள்ள 13 குளங்களில் 24 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக தாசில்தார் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்துள்ளார். 

 

invasions in thiruthuraipoondi ponds

 

 

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள 32 குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு திருவாருர் கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகப் பொறியாளர், திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிடக் கோரி, திருத்துறைப்பூண்டியை சேர்ந்த ஐயப்பன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அடங்கிய அமர்வு,  இந்த ஆக்கிரமிப்பு குறித்து நேரில் ஆய்வு செய்து  அறிக்கை தாக்கல் செய்ய  திருத்துறைபூண்டி தாசில்தாருக்கு உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, திருத்துறைப்பூண்டி தாசில்தார் ராஜன்பாபு,  குளங்கள் எல்லை மற்றும் ஆக்கிரமிப்பு விபரங்கள் தொடர்பான ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தார்.  அதில் பிடாரிகுளம், அரசங்குளம் உள்ளிட்ட 13 குளங்கள் அளவிடப்பட்டு உள்ளதாகவும், அதில் 24 ஆக்கிரமிப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.  மீதமுள்ள 19 குளங்கள் அருகில் நஞ்சை நிலங்களில் பயிர்கள் உள்ளதால் அறுவடைக்கு பிறகு அந்தக் குளங்கள் தொடர்பான எல்லையை அளவீடு செய்து ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து, மீதமுள்ள குளங்களை அளந்து, ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, தாசில்தாருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள்,  விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்